ஜடேஜா காயம் குணமடையாவிட்டால் யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பு!
மும்பை: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங்கும் விளையாட ஒரு திடீர் வாய்ப்பு நெருங்கி வந்துள்ளது. உத்தேச அணியில் கூட இடம் பெற முடியாமல் வெளியில் நிற்கும் யுவராஜ், உத்தேச அணியில் இடம் பெற்றுள்ள ரவீந்திர ஜடேஜாவுக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக உள்ளே நுழையும் வாய்ப்பைப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணியின் 30 பேர் கொண்ட உத்தேச அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த உலகக் கோப்பைத் தொடரின் நாயகனான யுவராஜ் சிங் இடம் பெறவில்லை. இதனால் அவர் பெரும் சோகத்திற்குள்ளானார்.

இந்த நிலையில் உத்தேச அணியில் இடம் பெற்றுள்ள ரவீந்திர ஜடேஜாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அது குணமடையாத பட்சத்தில் ஜடேஜாவுக்குப் பதில் யுவராஜ் சிங் உள்ளே வரும் வாய்ப்பு பெருகியுள்ளது.
உத்தேச அணியில் இடம் பெற முடியாமல் போன யுவராஜ் சிங், ஐபிஎல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். மேலும் பிசிசிஐயின் ஒப்பந்தப் பட்டியலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். ஆனால் ரஞ்சிப் போட்டியில் பிரமாதமாக ஆடி அனைவரையும் கவர்ந்தார் யுவராஜ். 3 சதங்களையும், ஒரு அரை சதத்தையும் அவர் போட்டார்.
இந்த நிலையில் அவருக்கு உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்கான ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. இறுதிப் பட்டியலை ஜனவரி 7ம் தேதி இந்திய தேர்வாளர்கள் குழு அறிவிக்கவுள்ளது. இந்த நிலையில் ஜடேஜாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது சென்னையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். ஜனவரி 7ம் தேதிக்குள் அவர் முழுமையாக குணமடையாவிட்டால் அவர் அணியிலிருந்து நீக்கப்படலாம். அவருக்குப் பதில் யுவராஜ் சிங் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.
யுவராஜ் 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் தனது கடைசி ஒரு நாள் போட்டியில் ஆடியிருந்தார். ஆனால் அதன் பின்னர் உள்ளூர் போட்டிகளில்அவர் ஜொலித்துள்ளார். இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அவருக்கு உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு தரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications