பூகம்பத்தால் சரிந்த பாங்காக் கட்டிடம்! உள்ளே புகுந்து டாக்குமெண்டுகளை திருட முயன்ற சீன நாட்டவர் கைது
பாங்காக்: மியான்மரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தாய்லாந்திலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பாங்காக்கில் இடிந்து விழுந்த ஒரே கட்டிடம் சீன நிறுவனம் ஒன்று கட்டி வந்ததாகும். இதனால் அதன் உறுதித்தன்மை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த சூழலில், இடிபாடுகளுக்குள் புகுந்த சீன நாட்டை சேர்ந்த 4 பேர் அங்கிருந்த டாக்குமெண்டுகளை அப்புறப்படுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மியான்மரில் திடீரென வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மியான்மரில் மட்டும் சுமார் 1700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தாய்லாந்து கட்டிடம்
இந்த பூகம்பத்தின் பாதிப்பு தாய்லாந்திலும் பரவலாக உணரப்பட்டது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கட்டப்பட்டு வந்த ஒரு கட்டிடம் நொடியில் இடிந்து விழுந்தது. பாங்காக்கில் எந்தவொரு கட்டிடமும் இடிந்து விழாத நிலையில், இந்த ஒரு கட்டிடம் மட்டுமே இடிந்து விழுந்தது பரபரப்பைக் கிளப்பியது. அதன் உறுதித்தன்மை குறித்தும் இது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக இருந்தது.
அந்தக் கட்டிடம் தாய்லாந்து அரசின் தணிக்கை துறைக்காகக் கட்டப்பட்டு வந்தது. அதைச் சீனாவைச் சேர்ந்த இத்தாலியன்-தாய் டெவலப்மென்ட் பப்ளிக் கம்பெனி என்ற நிறுவனமே கட்டி வந்தது. பூகம்பத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில், அந்த பகுதியைப் பேரிடர் மண்டலமாகத் தாய்லாந்து அரசு அறிவித்தது. மேலும், அந்த பகுதிக்கு மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
சீன நாட்டவர்
இதற்கிடையே அந்த இடத்தில் சட்டவிரோதமாக நுழைந்ததாகச் சொல்லி சீனாவைச் சேர்ந்த சிலரைத் தாய்லாந்து போலீசார் கைது செய்தனர். அவர்கள் அந்த இடிபாடுகளில் இருந்து டாக்குமெண்டுகளை எடுக்கவே அங்குச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சென்று 32 டாக்குமெண்டுகளை அனுமதியின்றி சட்டவிரோதமாக அகற்றியதற்காகச் சீனாவைச் சேர்ந்த 4 பேரைத் தாய்லாந்து போலீசார் கைது செய்துள்ளனர்.
சிக்கியது எப்படி
பூகம்பத்தில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில், அங்கு வேறு யாரும் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை. இந்தச் சூழலில் அடையாளம் தெரியாத நபர்கள் கட்டிட இடிபாடுகளில் சென்று ஆவணங்களை அகற்றுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்குச் சோதனை நடத்தியதில் சீனாவைச் சேர்ந்த ஒருவர் அங்கு இருந்தது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது அவர் தன்னை இடிந்து விழுந்த கட்டுமான திட்டத்தின் மேலாளர் என்று கூறியிருக்கிறார். மேலும், அவரிடம் தேவையான பெர்மிட்கள் இருப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.
32 டாக்குமெண்டுகள்
மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் மூன்று பேரைக் போலீசார் கைது செய்தனர். அவர்கள் எடுத்துச் சென்ற 32 ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் ப்ளூ பிரிண்ட் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து விசாரித்த போது இன்சூரன்ஸ் பெறவே அந்த டாக்குமெண்டுகளை எடுத்துச் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணைக்கு பிறகு சீனாவைச் சேர்ந்த நால்வரையும் அதிகாரிகள் விடுவித்துவிட்டனர். இருப்பினும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 4 பேரும் மீதும் தாய்லாந்து அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளது. அதேநேரம் சீனாவைச் சேர்ந்த மற்றொரு நபரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications