ஜப்பானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு
டோக்கியோ: ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரையில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
ஜப்பான் நாடு பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" இல் அமர்ந்திருக்கிறது, இது தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் தீவிர நில அதிர்வு நடவடிக்கைகளின் ஒரு வளைவு பகுதியாகும். இதனால் அடிக்கடி ஜப்பானில் நில அதிர்வு ஏற்படுகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டில், மியாகி மாகாணத்திற்கு கிழக்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஒரு பெரிய சுனாமிக்கு காரணமாக அமைந்தது. அந்த சுனாமியால் புகுஷிமா அணு உலை உடைத்தது. அத்துடன் சுமார் 16,000 மக்கள் உயிரிழக்க காரணமாக அமைந்தது.
இந்நிலையில் ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரையில் பசிபிக் கடலின் அடியில் 41.7 கிலோமீட்டர் (26 மைல்) தொலைவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியாகி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 50 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என்று யுஎஸ்ஜிஎஸ் தனது இணையதளத்தில் கூறியது, உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் இல்லை என்று கூறப்படுகிறது.
ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (ஜே.எம்.ஏ) இந்த நிலநடுக்கத்தை 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாகவும் 50 கிலோமீட்டர் ஆழத்திலும் நிகழ்ந்ததாகவும், அந்நாட்டு நேரப்படி, அதிகாலை 5.30 மணிக்கு தாக்கியதாகவும் கூறியது. இந்த நிலநடுக்கத்திற்கு பின்னர் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்று ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications