வீழும் உக்ரைன் தலைநகர் கீவ்...64 கி.மீ நீளத்துக்கு அணிவகுக்கும் ரஷ்யா படைகள்- பற்றி எரியும் வீடுகள்!
கீவ்: ரஷ்யாவின் முழுவீச்சிலான படையெடுப்பின் முதன்மை இலக்காக உக்ரைன் தலைநகர் கீவ் இருக்கிறது. கீவ் நகருக்கு வெளியே சுமார் 64 கி.மீ நீளத்துக்கு ரஷ்யா படைகள் அணிவகுத்து நிற்கும் செயற்கைக் கோள் படங்கள் உலகை அதிர வைத்துள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா யுத்தம் தொடங்கி 6 நாட்களாகிவிட்டது. உக்ரைனுக்கு உதவுகிறோம் என்கிற பல நாடுகளின் குறிப்பாக அமெரிக்கா ஆதரவு நாடுகளின் அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவை தருகிறோம் என்கிறது உக்ரைன்.

ரஷ்யா ராணுவம்
ஆனால் ரஷ்யாவுடன் இதர அண்டை நாடுகளான அர்மீனியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், பெலாரஸ் ஆகியவை கைகோர்த்துள்ளன. உக்ரைனின் 2-வது பெரிய நகரமாக கார்கிவ் ரஷ்யாவின் வசமானது. இதனைத் தொடர்ந்து தலைநகர் கீவ் நோக்கி ரஷ்யா ராணுவம் முன்னேறி வருகிறது.

வீழ்கிறது கீவ் நகரம்
கீவ் நகர் மீது உக்கிரமான வான்வழித் தாக்குதல்களையும் ஏவுகணைத் தாக்குதல்களையும் ரஷ்ய படையினர் நடத்தி வருகின்றனர். இதனால் கீவ் நகரின் பல பகுதிகளில் கட்டிடங்கள் கொழுந்துவிட்டு பற்றி எரிகின்றன. மாக்ஸர் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள சேட்டிலைட் படங்களில் கீவ் நகரை நோக்கி 60 கி.மீ நீளத்துக்கு ரஷ்யா படைகள் அணிவகுத்து நிற்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளின் வழியாகவும் உக்ரைன் மீது தாக்குதல்களை ரஷ்யா விரிவாக்கம் செய்கிறது. இதனால் உக்ரைன் தலைநகர் கீவ் நகரமானது எந்த நேரத்திலும் ரஷ்யா படைகளிடம் விழக் கூடும்.

உடன்பாடு ஏற்படவில்லை
உக்ரைனை ஆக்கிரமிப்பது நோக்கம் அல்ல என்று ரஷ்யா ஏற்கனவே கூறியிருக்கிறது. உக்ரைனில் வாழும் ரஷ்யா தேசிய இனத்தவருக்கான உரிமைகள் தொடர்பான 2014,2015 மின்ஸ்க் ஒப்பந்தங்களை உக்ரைன் மதித்து நடக்க வேண்டும் என்கிறது ரஷ்யா. பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் இதனையே ரஷ்யா வலியுறுத்தியது. ஆனால் நேற்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
Recommended Video

பொம்மை அரசாங்கம்
உக்ரைனில் ஆட்சி மாற்றத்தை ரஷ்யா மேற்கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014-க்கு முன்பு வரை ரஷ்யா ஆதரவு அதிபர்தான் உக்ரைனில் பதவியில் இருந்தார். 2014-ல் உக்ரைன் தேசிய இன எழுச்சி உருவானது. இதற்கு பதிலடியாகத்தான் உக்ரைனின் ஒரு பகுதியான கிரீமியாவை கபளீகரம் செய்தது ரஷ்யா. இப்போது தலைநகர் கீவ் விழுந்தாலும் பொம்மை அதிபர் ஒருவரை ரஷ்யா பதவியில் அமர்த்தும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications