தனிமைப்படுத்துதலை மீறி.. கொரோனாவை பரப்பியவருக்கு 5 ஆண்டுகள் சிறை .. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஹனோய்: வியட்நாமில் கொரோனாவை பரப்பிய ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வியட்நாமில் ஏப்ரல் மாத இறுதியில் இருந்து நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் அதிகமாகி வருகின்றன.
உலகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டம் போட்டு வரும் கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்திய வியட்நாம் நாட்டில் தற்போது வைரஸின்
தாக்கம் அதிகமாக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 12,481 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

விதிகளை மீறினார்
இந்த நிலையில் வியட்நாமில் கொரோனாவை பரப்பிய ஒருவருக்கு அதிரடியாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 28 வயதான லீ வான் ட்ரை என்பவர் அரசின் கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி ஹோ சி மின் நகரத்தில் இருந்து தனது சொந்த மாகாணமான கா மாவுக்கு சென்றுள்ளார். அதாவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் 21 நாள் தனிமைப்படுத்துதல் விதிகளை மீறி பயணம் செய்துள்ளார்.

5 ஆண்டு சிறை
லீ வான் ட்ரையின் இந்த பொறுப்பற்ற தன்மை காரணமாக சுமார் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும். ஒருவர் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கொரோனா விதிகளை மீறி விட்டதாக இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் அரசின் தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை மீறி மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயலில் ஈடுபட்ட லீ வான் ட்ரைக்கு 5 ஆண்டுகள் சிறை தணடனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
Recommended Video

பலருக்கு தண்டனை
லீ வான் ட்ரை வேண்டுமென்றே நோயை பரப்பும் வகையில் செயல்பட்டுள்ளார் என்று நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. வியட்நாமில் கொரோனா விதிகளை மீறியதற்காக இதுபோல் பலர் தண்டிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு விதிகளை மீறிய ஹாய் டுவோங்கில் உள்ள 32 வயதான ஒருவருக்கு ஜூலை மாதத்தில் 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதே குற்றச்சாட்டிற்காக மார்ச் மாதத்தில் வியட்நாம் ஏர்லைன்ஸ் விமான உதவியாளர் இரண்டு வருட இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு 2 வருட சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.

அதிகரிக்கும் கொரோனா
இந்த ஆண்டு தொடக்கத்தில் வியட்நாமில் கொரோனா பாதிப்புகள் குறைவாக இருந்தாலும் ஏப்ரல் மாத இறுதியில் இருந்து பெரும்பாலான நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் பதிவாகியுள்ளன. கடுமையான தொற்று காரணமாக வியட்நாமின் தலைநகர் ஹனோய் மற்றும் வணிக மையமான ஹோ சி மின் நகரம் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வியட்நாமில் இதுவரை மொத்தம் கிட்டத்தட்ட 5,40,000 நோய்த்தொற்றுகள் பதிவாகி உள்ளன. 13,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications