பெண்களை தொடக்கூடாது.. தாலிபான் ரூலால் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் மகளிர்! மீட்க மறுப்பு
காபூல்: ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2,200க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். பல பெண்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு தவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் அவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெண்களை தொடக்கூடாது என்ற ரூல்ஸ் ஆப்கானிஸ்தானில் இருப்பதால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த மாதம் 31ம் தேதி இரவில் கிழக்கு ஆப்கானிஸ்தானில் திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 என நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் அருகில் பூமிக்கடியில் 8 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் நிலை கொண்டிருந்தது. இதனால் ஆப்கானிஸ்தானின் குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. அதோடு பல ஆயிரம் மக்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தனர். இதுவரை 2,200 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். 3,600க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இன்னும் ஏராளமானவர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். பலர் மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன. இந்நிலையில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இடிபாடுகளுக்குள் சிக்கி தவிக்கும் பெண்களை பார்த்தாலும் கூட அங்குள்ள ஆண்கள் மற்றும் மீட்டு படையினர் மீட்பது இல்லையாம். இதற்கு ஆப்கானிஸ்தானில் அமலில் இருந்து No Skin Contact with Males என்ற ரூல்ஸ் தான் காரணம்.
அதாவது ஒரு பெண்ணை அவரது கணவர் அல்லது நெருங்கிய உறவினர்களான அப்பா, சகோதரர், மகன் மட்டுமே தொட வேண்டும். மற்றவர்கள் தொடக்கூடாது என்ற ரூல்ஸை ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரியும் தாலிபான்கள் பிறப்பித்துள்ளனர். இது ஆப்கானிஸ்தானில் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதை மீறுவோருக்கு தண்டனை கிடைக்கும். இதனால் ஆண்கள் தங்களின் குடும்ப பெண்களை தவிர வேறு யாரையும் தொடுவது இல்லை.
தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டு இடிபாடுகளுக்குள் பெண்கள் சிக்கியிருந்தாலும் கூட இந்த ரூல்ஸை அங்குள்ளவர்கள் கடுமையாக பின்பற்றி வருகின்றனர். இதனால் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கும் போராடும் பெண்களை பார்க்கும் ஆண்களும் அவர்களை மீட்பது இல்லை. மாறாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் ஆண்கள் மற்றும் குழந்தைகளை மட்டுமே மீட்டு வருகின்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் பெண்களை குடும்பத்தினர் யாராவது வந்து மீட்பார்கள் என்று கடந்து செல்கின்றனர்.
இதனால் பல பெண்கள் இடிபாடுகளில் சிக்கி உதவி கிடைக்காமல் தவித்துள்ளனர். தற்போது ஆப்கானிஸ்தானில் பெண் மீட்பு பணியாளர்கள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் மருத்துவ கல்வி உள்பட பிற இடங்களில் பெண்கள் பணியாற்ற தடை உள்ளது. இது நிலநடுக்கத்தின் சந்தர்ப்பத்தில் அங்குள்ள நிலைமையை இன்னும் மோசாக்கி உள்ளது.
இதுபற்றி குனார் கிராமத்தை சேர்ந்த பீபீ ஆய்ஷா கூறுகையில், ‛‛இடிபாடுகளுக்குள் சிக்கிய எங்களுக்கு யாரும் உதவவில்லை. பல பெண்களுக்கும் ரத்தம் வடிந்தது. ஆனாலும் எங்களை புறக்கணித்து விட்டனர்'' என்று கூறினார். அதேபோல் 33 வயது நிரம்பிய தஹ்ஸீபுல்லா முஹாசிப் மசார் தாரா கிராமத்தில் மீட்பு பணிக்கு தன்னார்வலராக சென்றார். அப்போது அவர் கூறுகையில், ‛‛ பெண்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தனர். ஆனால் அவர்களை ஆண்கள் யாரும் மீட்கவில்லை. கலாச்சாரம் சார்ந்த ரூல்ஸ்க்கு பயந்து பெண்கள் அருகே யாரும் செல்லலவில்லை'' என்றார். இது தாலிபான்களில் பெண்களின் நிலைமையை கவலைக்கிடமாக்கி உள்ளது.
தாலிபான்கள் பொதுவாக மதஅடிப்படைவாதிகள். இவர்கள் கலாசாரம், மத விதிமுறை என்று பல ரூல்ஸ்களை விதித்துள்ளனர். தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் கிடையாது. உயர் கல்வி கிடையாது. ஜிம் செல்ல தடை, பூங்காவிற்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே செல்ல அனுமதி, ஹோட்டல்களில் ஆண்களுடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிட தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்துள்ளனர். இப்படியான கட்டுப்பாடுகளில் ஒன்று தான் ‛No Skin Contact With Males' என்பதாகும். இந்த விதி சாதாரண நாட்களில் கடைப்பிடித்தால் ஓகே. ஆனால் நிலநடுக்கத்தில் இடிந்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் பெண்களை கூட காப்பாற்ற மாட்டேன் என்று இருப்பது அனைவரையும் பதற வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications