ஹாங்காங், சிங்கப்பூரை தொடர்ந்து நேபாளத்திலும் எவரெஸ்ட், எம்டிஹெச் மசாலாவுக்கு தடை! என்ன காரணம்
காத்மாண்டு: சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளைத் தொடர்ந்து நேபாள நாட்டிலும் எவரெஸ்ட் மற்றும் எம்.டி.ஹெச் (MDH) நிறுவனங்களின் மசாலா பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருக்கும் முக்கியமான மசாலா நிறுவனங்களாக எவரெஸ்ட் மற்றும் எம்டிஹெச் நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் தங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது.

இதற்கிடையே இந்த நிறுவனங்களின் மசாலாக்களில் அளவுக்கு அதிகமாக சில கெமிக்கல்கள் இருப்பதாகச் சொல்லி சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நிறுவனங்கள் தடை விதித்து உத்தரவிட்டன.
தடை விதித்து உத்தரவு: இந்தச் சூழலில் இப்போது நேபாளத்திலும் இந்த இரு நிறுவனங்களுக்கும் தடை விதித்து அந்நாட்டின் உணவுத் தரக் கட்டுப்பாட்டுத் துறை உத்தரவிட்டுள்ளது. எவரெஸ்ட் மற்றும் எம்டிஹெச் ஆகிய இரண்டு இந்திய மசாலா பிராண்டுகளின் இறக்குமதி, பயன்பாடு மற்றும் விற்பனைக்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. எத்திலீன் ஆக்சைடு அளவு அதிகமாக இருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்நாட்டின் உணவு தரக் கட்டுப்பாட்டுத் துறையின் செய்தித் தொடர்பாளர் மோகன் கிருஷ்ணா மஹர்ஜன் கூறுகையில், "நேபாளத்தில் எவரெஸ்ட் மற்றும் எம்டிஹெச் பிராண்ட் மசாலாப் பொருட்கள் இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மசாலாப் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில், இந்த தடை விதிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே இந்த தடையை அறிவித்துவிட்டோம். இந்தத் தடை இப்போது நேபாளத்தில் அமலில் இருக்கிறது.
நேபாளத்தில் தடை: அதேபோல இந்த இரு நிறுவனங்களின் மசாலா பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த இரண்டு பிராண்டுகளின் மசாலாப் பொருட்களில் சோதனை நடத்தி வருகிறோம். அதன் இறுதி அறிக்கை வரும் வரை தடை தொடரும். ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாடுகள் ஏற்கனவே தடை விதித்துள்ளன. அதன் அடிப்படையிலேயே நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்" என்றார்.
என்ன காரணம்: அதாவது குறிப்பிட்ட இந்த நிறுவனங்களின் மசாலா பொருட்களின் கெமிக்கல்கள் அதிகம் இருக்கிறதா என்பதே நேபாள அரசு உறுதி செய்யவில்லை.. மாறாக ஹாங்காங், சிங்கப்பூர் தடை விதித்து உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் நாட்டிலும் தடை விதித்து உள்ளது. இப்போது இரு நிறுவனங்களின் மசாலா பொருட்களை அவர்கள் சோதனை செய்து வரும் நிலையில், அதில் கிடைக்கும் முடிவுகள் அடிப்படையிலேயே இறுதி முடிவை எடுப்பார்கள் எனத் தெரிகிறது.
மசாலா வாரியம்: பொதுவாக மசாலா பொருட்களில் இந்த எத்திலீன் ஆக்சைடு எவ்வளவு இருக்க வேண்டும் என்ற விதி ஒவ்வொரு நாடுகளுக்கும் மாறுபடும்.. அனுமதிக்கப்பட்ட அளவு என்பது 0.73%- 7% வரை மாறுபட்டு இருக்கிறது. இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதி இருப்பதும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் இந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட மசாலாப் பொருட்கள் என்பது இந்தியாவின் மொத்த மசாலா ஏற்றுமதியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்திய மசாலா வாரியம் என்ற அமைப்பு இந்திய மசாலா பொருட்களின் பாதுகாப்பையும் தரத்தையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்ட எத்திலீன் ஆக்சைடு குறித்த வழிகாட்டுதல்களையும் அந்த வாரியம் வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications