தீவிரவாத அமைப்புகளை முற்றாக அழியுங்கள்.. பாக்.குக்கு மன்மோகன் எச்சரிக்கை

இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், ஐ.நா. பொதுச் சபையில் பேசும்போது இந்த எச்சரிக்கையை விடுத்தார் பிரதமர்.
நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவிக்கு வந்த பின்னர் முதல் முறையாக அவரும், பிரதமரும் சந்திக்கவுள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.
மேலும் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளும், பாகிஸ்தான் ராணுவத்தினரும் அடுத்தடுத்து நடத்தி வரும் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இந்த சந்திப்பு நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஐ.நா. பொதுச் சபையில் பேசினார் பிரதமர் மன்மோகன் சிங். அப்போது அவர் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துப் பேசினார். அவர் பேசுகையில், அரசு ஆதரவு எல்லை கடந்த தீவிரவாதம் இந்தியாவுக்குப் பெரும் கவலையாக உள்ளது. மேலும் எங்களது எல்லைப் புற நாடான பாகிஸ்தான், தீவிரவாதிகளின் மண்ணாக இருப்பதும் கவலை தருகிறது.அரசே தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தருவதும், நிதியுதவி செய்வதும், பயிற்சி தருவதும், ஊக்குவிப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். மேலும் தீவிரவாதிகள் தங்களது மண்ணை பயன்படுத்துவதை கண்டும் காணாமல் ஒரு அரசு இருப்பதையும், தனது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாது, ஏற்க முடியாது.
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. காஷ்மீர் உள்பட பாகிஸ்தானுடனான அத்தனை பிரச்சினைகளையும் தீர்ப்பதில் இந்தியா உண்மையான அக்கறையுடன் உள்ளது. இரு தரப்பு பேச்சுவார்த்தையை மட்டுமே இந்தியா எப்போதும் ஆதரிக்கும். ஐ.நா. சபையின் தலையீட்டை இதில் இந்தியா ஆதரிக்காது. ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானங்களின் அடிப்படையில் எந்தப் பேச்சுவார்த்தையையும் இந்தியா ஆதரிக்காது என்றார்.


Click it and Unblock the Notifications
