ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்நோக்கும் தேர்தல்.. முடிவு என்ன? ஜஸ்ட் மிஸ்ஸானாலும் சீனா உள்ள வந்திடுமே
மாலே: நமது நாட்டில் ஒரு பக்கம் லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்தாலும் ஒட்டுமொத்த தேசமும் ஒரு தேர்தலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. இப்போது அடுத்த கட்ட தேர்தலுக்கு அனைவரும் ரெடியாகி வருகிறார்கள்.

தேசத்தில் இந்த லோக்சபா தேர்தல் முக்கியமானது என்றால் தேசத்திற்கே முக்கியமான ஒரு தேர்தல் வெளிநாட்டில் நடக்கிறது. அதை நமது நாடு உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது. அதுதான் மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தல்.
மாலத்தீவு: குட்டி தீவு நாடான மாலத்தீவில் மொத்தம் 93 எம்பிக்கள் உள்ளனர். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை 2.8 லட்சம் மாலத்தீவு மக்கள் அவர்களைத் தேர்வு செய்வார்கள். இப்போது அங்கே அதிபராகச் சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முகமது முய்சு இருக்கிறார். இதன் காரணமாகவே இந்த தேர்தல் முக்கியமானது. அதேநேரம் இந்தத் தேர்தலில் முய்சு கட்சி வென்றாலும் எதிர்க்கட்சி வென்றாலும் முகமது முய்சுவே அதிபராகத் தொடர்வார். தேர்தலில் தோற்றால் எப்படி அதிபராகத் தொடர்வார் என்ற கேள்வி வரலாம். அது குறித்துப் பார்க்கலாம்.
மாலத்தீவைப் பொறுத்தவரை அங்கே நம்மைப் போலப் பிரதமர் ஆட்சி இல்லை. அங்கே அதிபர் ஆட்சி முறை இருக்கிறது. அதாவது அனைத்து அதிகாரங்களும் மாலத்தீவு அதிபருக்கே இருக்கும். அதிபர் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தல் முய்சு வென்று அதிபராகத் தேர்வானார்.
நாடாளுமன்றத் தேர்தல்: அதிபர் தேர்தலைப் போலவே நாடாளுமன்றத்திற்குத் தனியாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். அது எம்பிக்களை தேர்வு செய்ய மட்டுமே பயன்படும். இதில் முய்சு கட்சி தோற்றாலும் அதிபராகத் தொடர்வார். அதேநேரம் நாடாளுமன்றத்தில் அவரது கட்சிக்கு பலம் இருக்காது என்பதால் விருப்பம் போல மசோதாக்களை கொண்டு வர முடியாது. எனவே, இதுவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தற்போது மாலத்தீவு நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை முய்சு கட்சிக்குப் பெரும்பான்மை இல்லை. அவருக்கு முன்பு அதிபராக இருந்த இந்திய ஆதரவு நிலைப்பாடு கொண்ட இப்ராஹிம் முகமது சோலிஹ்கின் மாலத்தீவு ஜனநாயகக் கட்சி தான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் காரணமாகவே அவரால் முழுமையாக விருப்பம் போலச் செயல்பட முடியவில்லை. இந்தியாவுக்கு எதிராக சில கடுமையான நடவடிக்கைகளை அவர் எடுக்க முயன்ற போதிலும், லோக்சபாவில் அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை.
புவிசார் அரசியல்: மாலத்தீவு புவிசார் அரசியலில் முக்கியமான இடத்தில் இருக்கிறது. முய்சு அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் இந்தியாவுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மாலத்தீவுக்கு உதவ அங்கிருந்த இந்தியா ராணுவத்தினரையும் வெளியேற உத்தரவிட்டார். அதேநேரம் மறுபுறம் அங்கே சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. மாலத்தீவில் உள்ள பல முக்கிய திட்டங்களில் சீனா மிகப் பெரியளவில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளன. இதனால் மாலத்தீவு தேர்தல் ரொம்பவே முக்கியமாக மாறுகிறது.
கள நிலவரம்: அங்கே கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து அங்குள்ள செய்தியாளர்கள் கூறுகையில், "தற்போதுள்ள சூழலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைப்பது போலத் தெரியவில்லை. இரு தரப்பிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது" என்றார். பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அது முய்சு கட்சிக்குப் பெரிய பின்னடைவாக இருக்கும். அவரால் விரும்பிய சட்டங்களைக் கொண்டு வர முடியாது. எனவே, இந்தத் தேர்தலை ஒட்டுமொத்த சேதமும் உற்று நோக்குகிறது என்றே சொல்லலாம்.












Click it and Unblock the Notifications