புதினை படுகொலை செய்ய முயற்சி.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.. பகீர் கிளப்பும் உக்ரைன் உளவுத்துறை
மாஸ்கோ: உக்ரைன் மீதான போர் நடவடிக்கைக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினை கொலை செய்ய முயன்று அவருக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு துறையின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோ கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி போரை துவங்கியது. 3 மாதங்கள் தாண்டியும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. போர் நிறுத்தம் தொடர்பாக இருநாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையும் கைக்கொடுக்கவில்லை.
மேலும் உக்ரைன் மீதான போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் வலியுறுத்தியும் ரஷ்யா செவிசாய்க்கவில்லை. இதனால் தொடர்ச்சியாக ரஷ்யா, உக்ரைன் மீது போர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

உக்ரைன்-ரஷ்யாவின் குற்றச்சாட்டுகள்
இந்நிலையில் தான் உக்ரைன், ரஷ்யா குறித்து பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்ற. அதாவது போரை சமாளிக்க உக்ரைன் அமெரிக்கா உதவுடன் உயிரி ஆயுத ஆய்வில் ஈடுபட்டதாக ரஷ்யா சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதனை உக்ரைன் மறுத்த நிலையில் மனிதாபிமானமற்ற முறையில் பள்ளிகள், மருத்துவமனைகள் மீது ரஷ்யா குண்டுவீசுவதாக கூறி வருகிறது.

விலாடிமிர் புதின் பாதிப்பு
இது ஒருபுறம் இருக்க உக்ரைன் போரை அதிகபட்சமாக மே 9ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் உத்தரவிட்ட நிலையில் இதை நிறைவேற்ற முடியாததால் விலாடிமிர் புதின் ரஷ்ய படை தளபதிகள், பாதுகாப்புத்துறை அமைச்சரை திட்டி கோபத்தை வெளிப்படுத்தியதாக தகவல்கள் கசிந்தன. மேலும் விலாடிமிர் புதினுக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் இதுதொடர்பாக ரஷ்யா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

கொலை முயற்சி
இந்நிலையில் தான் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினை கொலை செய்ய முயற்சி நடந்ததாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது. விலாடிமிர் புதினின் உடல்நலம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில் இது அனைவரின் புருவத்தை உயர்த்தி உள்ளது. இதுபற்றி உக்ரைனின் பாதுகாப்பு உளவுத்துறையின் தலைவரான மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோ, உக்ரைன்ஸ்கா பிராவ்தா தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

உண்மையில் நடந்துள்ளது
பிப்ரவரி 24ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடலுக்கும் இடையேயான காகசஸில் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினை படுகொலை செய்ய முயற்சி நடந்தது. காகசஸ் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த கொலை முயற்சியில் விலாடிமிர் புதின் தப்பித்தார். இது உண்மையில் நடந்துள்ளது'' எனவும் கூறியுள்ளார். இருப்பினும் இதுபற்றி இன்னும் ரஷ்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.
Recommended Video

நம்ப முடியவில்லை
இதற்கிடையே விலாடிமிர் புதினை சுற்றி எப்போதும் பாதுகாப்பு அதிகாரிகள் இருப்பார்கள். இதனை மீறி அவரை கொலை செய்ய முயன்றது என்பது நம்ப முடியவில்லை பலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஆனாலும் விலாடிமிர் புதின் இதற்கு முன்பு அதாவது 2017 காலக்கட்டத்தில் பேசியபோது தன்னை 5 முறை கொலை செய்ய முயற்சி நடந்திருப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications