பசிபிக் தீவுகளில் கடலுக்கடியில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு
விலா துறைமுகம்: தென் பசிபிக் கடலில் அமைந்துள்ள வானூட்டு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 7.0ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதால் இந்த தீவில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதிப்புகள் குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த தீவையொட்டியுள்ள கடல் பகுதியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்திருக்கிறது. இதனையடுத்து மக்கள் மேடான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி அலாரம் அடித்திருக்கிறது. இதனையடுத்து பாதிப்பு ஏற்படாது என்று தெரிந்த பின்னர் இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதேபோல இந்த நிலநடுக்கத்தால் நியூசிலாந்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கு முன்னர் இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ரிக்டர் அளவில் 7.5ஆக நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி உருவானது. இதில் சுமார் 4,300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வானூட்டு நாடு என்பது சுமார் 80 சிறிய தீவுகளை கொண்டிருக்கிறது. இந்த தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். இதனால் சுனாமி உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டு பொருட் சேதமும் உயிர் சேதமும் அடிக்கடி ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. எனவே உலக அளவில் அதிக அளவு பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடுகளில் இந்த வானூட்டு தீவுகள் முன்னிலையில் இருக்கின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முழுமையாக தகவல்கள் வெளியாகாத நிலையில், தீவில் உள்ள மக்கள் சமூக வலைத்தளங்களில் இந்த பாதிப்புகளை பகிர்ந்து வருகின்றனர்.
இது தொடர்பான வீடியோவில் மக்கள் உயரமான இடத்தை நோக்கி ஓடுவது தெரிகிறது. மேலும், சில வீடுகளின் கூரைகள் சில சரிந்து விழுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் நள்ளிரவு 11.30 மணியளவில் பதிவாகியுள்ளது. இருப்பினும் பெரிய பாதிப்பு இல்லையென்று சொல்லப்படுகிறது. ஏனெனில் இந்த நிலநடுக்கம் கடலின் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால் மேலே தீவின் தரை தளத்தில் லேசான பாதிப்புகள் தான் உணரப்பட்டுள்ளன. இந்த தீவில் எரிமலைகள் இருப்பதால் எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என்கிற அச்சமும் மேலெழுந்திருக்கிறது. கடைசியாக இந்த எரிமலையானது 1945ம் ஆண்டு வெடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications