சீனாவில் பயங்கரம்.. இஸ்ரேல் தூதரக அதிகாரிக்கு கத்திக்குத்து.. ஹமாஸ் உடனான மோதலுக்கு நடுவே ஷாக்
பெய்ஜிங்: இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. இந்த விஷயத்தில் சீனா தொடர்ந்து மவுனமாக இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் சீனாவில் பணியாற்றி வரும் இஸ்ரேல் தூதரக அதிகாரி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 7 ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது 7 ஆயிரம் ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்குள்ள மக்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கி உள்ளது. இன்று 7 வது நாளாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் தற்போது வரை 2,500க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதுமட்டுமின்றி பல கட்டடங்கள் சிதைந்துபோயுள்ளன. கசா பகுதியை தற்போது இஸ்ரேல் முற்றுகையிட்டு தண்ணீர், மின்சாரம், உணவு பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதை தடை செய்துள்ளது. மேலும் தற்போது வான்வெளி தாக்குதல் நடத்தும் நிலையில் விரைவில் தரைவழி தாக்குதல் நடத்தி ஒட்டுமொத்த காசாவையும் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க இஸ்ரேல் முயற்சித்து வருகிறது.
அதேவேளையில் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க ஹமாஸ் அமைப்பு உலக நாடுகளின் உதவியை கோரியுள்ளது. பல இஸ்லாமிய நாடுகள் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல் இஸ்ரேலுக்கும் அமெரிக்க உள்பட பல மேலை நாடுகள் ஆதரவாக இருக்கின்றன. இதனால் இருதரப்புக்கும் இடையேயான மோதல் என்பது இன்னும் உலகளவில் பெரும் பிரச்சனையாக உருவாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் சீனாவில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றி ஏராளமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் தூதரக அதிகாரி ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த அந்த அதிகாரி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து அந்த அதிகாரி நலமாக இருக்கிறார் என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த கத்திக்குத்துக்கு தாக்குதலை நடத்தியது யார்? என்பது உடனடியாக தெரியவில்லை. அதோடு இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இதற்கிடையே தான் சீனாவில் தூதரக அதிகாரி மீதான கத்திக்குத்து சம்பவத்தால் இஸ்ரேல் தனதுவருத்தத்தை பதிவு செய்துள்ளது. அதோடு சீனா-இஸ்ரேல் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
ஏனென்றால் கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படை முன்னறிவிப்பின்றி 7 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு சீனா எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யாமல் அமைதியாக உள்ளது. இதனால் இஸ்ரேல் வருத்தமடைந்தது. அதோடு சீனாவுக்கான இஸ்ரேல் தூதரக அதிகாரி தனது வருத்தத்தை பதிவு செய்தார். இத்தகைய சூழலில் தான் சீனாவில் வைத்து இஸ்ரேல் தூதரக அதிகாரி கத்திக்குத்து விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் தற்போதைய இஸ்ரேல் -பாலஸ்தீன மோதலை தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் இஸ்லாமியர்கள், யூதர்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்பட பல இடங்களில் இஸ்லாமியர்கள், யூதர்கள் வசிக்கும் பகுதிகள், மதவழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications