இந்தியர்கள் மொத்தமாக கைது? ஈரானில் உச்சக்கட்டப் பதற்றம்.. நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!
தெஹ்ரான்: ஈரான் நாட்டில் கடந்த சில நாட்களாகவே கமேனி அரசுக்கு எதிராக மிகப் பெரியளவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதற்கிடையே அங்கு வசிக்கும் இந்தியர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இப்போது ஈரான் அரசே முக்கியமான விளக்கத்தைக் கொடுத்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்!
மத்தியக் கிழக்கு நாடான ஈரானில் நாளுக்கு நாள் போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. அங்குள்ள கமேனி அரசுக்கு எதிராக ஆரம்பித்த போராட்டம் இப்போது நாடு முழுக்க பரவியுள்ளது. போராட்டத்தை ஒடுக்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கும் பெரியளவில் பலன் இல்லை. இதனால் அங்குப் பரபரப்பான ஒரு சூழலே நிலவி வருகிறது.

இந்தியர்கள் கைது?
ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் முழுக்க மிகப் பெரியளவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதற்கிடையே போராட்டங்களுக்கு மத்தியில், அங்கு ஆறு இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அதில் 10 ஆப்கன் நாட்டை சேர்ந்தவர்கள், 6 இந்தியர்கள் என மொத்தம் 16 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் சில சமூக வலைத்தளங்களில் மேலும் பல இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் பரவியது.
முக்கிய விளக்கம்
ஈரானில் கணிசமான அளவு இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், இந்த தகவல்கள் அச்சத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தது. இருப்பினும், இது பொய்யான தகவல் எனச் சொல்லி ஈரான் அரசு இந்தத் தகவலைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்தியாவிற்கான ஈரானியத் தூதுவர் முகமது ஃபதாலி, தனது ட்விட்டர் பக்கத்தில், "ஈரானில் வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டதாக வரும் செய்திகள் பொய்யானவை.. அதிகாரப்பூர்வத் தகவல்களை மட்டுமே நம்புங்கள்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
ஈரான் போராட்டங்களைப் பொறுத்தவரை அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. அமைதியான முறையில் போராடுவோருக்கு எதிராக வன்முறை பயன்படுத்தப்பட்டால் அமெரிக்கா உள்ளே வரும் என்று டிரம்பும் சொல்லியுள்ளார். அவர் ராணுவ நடவடிக்கைகளைக் கூட பயன்படுத்தப் பரிசீலிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதை மிகக் கடுமையாக எதிர்த்துள்ள ஈரான், தனது உள்நாட்டு விவகாரத்தில் டிரம்ப் தலையிட்டால் அமெரிக்க ராணுவமும் இஸ்ரேலும் தங்களின் அடுத்த இலக்குகளாகும் என எச்சரித்துள்ளது.
நிலைமை மோசம்
ஈரான் முழுவதும் நடந்து வரும் இந்த போராட்டங்களால் குறைந்தது 544 பேர் உயிரிழந்ததாகச் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தோரில் 496 பேர் போராட்டக்காரர்கள், 48 பேர் பாதுகாப்புப் படையினர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், உயிரிழப்புகள் குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இப்போது வரை வெளியிடவில்லை. இதுபோக கடந்த இரண்டு வாரங்களாக ஈரானில் நடக்கும் போராட்டங்களில் சுமார் 10,600க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இணையச் சேவை முடக்கம்
ஈரானில் நிலைமை மோசமாக இருப்பதால் அங்குப் போராட்டங்களை ஒடுக்க இணையம் மற்றும் தொலைப்பேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு உண்மையில் என்ன மாதிரியான நிலைமை இருக்கிறது என்பதை வெளிநாடுகள் கண்டறிவதில் சிக்கல் நிலவுகிறது. இதுபோல இணையச் சேவையை முடக்குவதால் ஈரான் பாதுகாப்புப் படை அடக்குமுறைகள் மறைக்கப்படலாம் என சர்வதேச நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
அதேநேரம் இணையத் தடையைத் தாண்டியும் கூட ஈரான் நாட்டில் இருந்து சில போராட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இவை ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை மூலம் இணையத்தில் பதிவிடப்பட்டதாகத் தெரிகிறது. அதில் வடக்கு தெஹ்ரானின் புனாக் பகுதியில் மிகப் பெரியளவில் போராட்டக்காரர்கள் ஒன்றுகூடியுள்ளது தெளிவாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications