கமேனிக்கு பிறகு ஈரானை வழிநடத்தும் அராஃபி.. இடைக்கால சுப்ரீம் லீடராக நியமனம்! யார் இவர்? பின்னணி
தெஹ்ரான்: இஸ்ரேல்- அமெரிக்கப் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் காமேனி கொல்லப்பட்டார். அடுத்து புதிய உச்ச தலைவரை விரைவில் அந்நாட்டின் நிபுணர்கள் சபை தேர்வு செய்யும் சூழலில், அதற்கு நடுவே இடைக்கால சுப்ரீம் லீடராக அயாத்துல்லா அலிர்சா அராஃபி தேர்வாகியுள்ளார். யார் இவர் இவரது பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.!
ஈரான் நாட்டை குறிவைத்து இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சனிக்கிழமை தாக்குதல் ஆரம்பமான சூழலில், அன்றைய நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். சுமார் 30 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்திய கமேனி மரணம் ஈரானுக்கு மிகப் பெரிய இழப்பாகவே இருக்கிறது.

இடைக்கால தலைவர்
இதற்கிடையே ஈரானின் இடைக்கால தலைமை கவுன்சிலின் தலைவராக அயாத்துல்லா அலிர்சா அராஃபி நியமிக்கப்பட்டார். இவரைக் கிட்டத்தட்ட ஈரானின் இடைக்கால சுப்ரீம் லீடர் என்றே சொல்லலாம். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரானின் உச்ச தலைவர் அயாத்துல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்ட நிலையில், அலிர்சா அராஃபி இப்போது இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரானின் அடுத்த இடைக்கால தலைவரை நிபுணர்கள் சபை தேர்வு செய்யும். அதுவரை மூன்று பேரைக் கொண்ட இந்த கவுன்சில் தான், உச்ச தலைவரின் பொறுப்புகளை ஏற்கும். இதில் அதிபர் மசூத் பெசெஷ்கியான், தலைமை நீதிபதி கோல்ம்ஹொசைன் மொஹ்செனி எஜீ ஆகியோரும் இருக்கும் நிலையில், அராஃபி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தயார்
இது தொடர்பாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறுகையில், "நாங்கள் இதுபோன்ற தருணங்களுக்குத் தயாராக இருந்தோம். காமேனியின் தியாகத்திற்குப் பிந்தைய காலம் உட்பட, அனைத்து சூழ்நிலைகளுக்கும் எங்களிடம் தெளிவான திட்டங்கள் உள்ளன. அந்த திட்டத்தின்படியே நாங்கள் செயல்படுகிறோம். எங்களை முடக்கிவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால், அதெல்லாம் நடக்காது" என்றார்.
யார் இந்த அலிர்சா அராஃபி?
மத்திய ஈரானின் யாஸ்ட் மாகாணத்தில் உள்ள மேபோட் நகரில் 1959ல் பிறந்த அவர், மதகுருமார்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை முகமது இப்ராஹிம் அராஃபி, முன்னாள் உச்ச தலைவர் ரூஹொல்லா கோமெனிக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்டார். 1969-ல், தனது 11 வயதில், அராஃபி தனது மதக் கல்வியைத் தொடர ஈரானின் முக்கிய மத மையமான கோமுக்குச் சென்றார். அங்கு மூத்த மதகுருமார்களிடம் பயின்று, இஸ்லாமியச் சட்டத்தைச் சுதந்திரமாக விளக்க முஜிதஹித் பட்டம் பெற்றார்.
இஸ்லாமிய நீதித்துறை மற்றும் தத்துவம் ஆகியன அராஃபியின் முக்கியத் துறைகள். அந்த இரு துறைகளில் தான் அவர் வல்லுநராக இருக்கிறார். அரபு மற்றும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் அவர், பல நூல்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். 1979 இஸ்லாமியப் புரட்சியின்போது 21 வயதான அராஃபி, 1980களில் இளம் மதகுருமார்களில் ஒருவராக இருந்தார். இஸ்லாமிய புரட்சியிலும் அவர் பங்கேற்றார்.
வளர்ச்சி
1989ம் ஆண்டு ஈரானின் சுப்ரீம் லீடராக கமேனி நிமியக்கப்பட்ட நிலையில், அதன் பிறகே அராஃபியின் வளர்ச்சி தொடங்கியது. அதன் பிறகு முக்கிய பதவிகள் அவருக்கு முக்கிய பதவிகள் கிடைக்க ஆரம்பித்தது. 1992ல், 33 வயதில், மேபோட் நகரின் வெள்ளிக்கிழமை தொழுகை அவர் தலைவரானார். அங்கு அவர் இருந்தபோது கவனிக்கப்படும் ஒரு தலைவராக இருந்தார். அவரது பேச்சும் கருத்துகளும் ஈரானில் மெல்லக் கவனம் பெற தொடங்கியது. இந்தச் சூழலில் தான் 2015ல் கோமின் முக்கிய வெள்ளிக்கிழமை தொழுகைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மேலும், ஈரான் நாட்டை சேராத ஷியா மதகுருக்களுக்குப் பயிற்சி அளித்து, இஸ்லாமியக் குடியரசின் சித்தாந்தத்தை வெளிநாடுகளில் பரப்பும் நோக்குடன் 2009ல் நிறுவப்பட்ட அல்-முஸ்தஃபா சர்வதேசப் பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் அராஃபி செயல்பட்டார்.
கார்டியன் கவுன்சில்
2016ல் ஈரானின் தேசிய மதக்கல்வி அமைப்பின் தலைவரான அவர், 2019ல் கார்டியன் கவுன்சிலில் உறுப்பினரானார். இந்த குழு தான் ஈரான் சட்டங்களை மறுபரிசீலனை செய்து, தேர்தல்களைக் கண்காணித்து, பொது பதவிகளுக்கான வேட்பாளர்களை அங்கீகரிக்கும். இந்த கார்டியன் கவுன்சிலில் மொத்தம் 12 உறுப்பினர்கள் இருக்கும் சூழலில், இவர்கள் முடிவே நியமனங்களில் இறுதி முடிவாக இருக்கிறது. மேலும், நாடாளுமன்ற சட்டங்களையும் வீட்டோ செய்யும் அதிகாரமும் இந்த குழுவுக்கு இருக்கிறது..
உச்ச தலைவரைத் தேர்வு செய்யும் நிபுணர்கள் சபையின் துணைத் தலைவராகவும் இதேதான் அராஃபி உள்ளார். பிப்ரவரி 2016ல், அவர் இந்த சபைக்குத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருப்பினும், 2021 மற்றும் 2024 தேர்தல்களில் அவர் வென்று நிபுணர்கள் சபை உறுப்பினரானார். 2024ல் அவர் அந்த அமைப்பின் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
அராஃபி
வெளியுலகிற்கு அராஃபி பற்றி பெரிதாகத் தெரியாது. இருப்பினும், மதகுருமார்கள் வட்டாரத்தில் இவர் அதிக செல்வாக்கு பெற்றவராகவே இருக்கிறார். மேலும், தீவிர சித்தாந்தம் கொண்டவராகவும் அறியப்படுகிறார். இந்த இக்கட்டான சூழலில் அவர் தலைமை பொறுப்புக்கு வந்துள்ள நிலையில், ஈரானை இடைக்கால தலைவராக அவர் எப்படி வழிநடத்தப் போகிறார் என்பதை உலகமே உற்றுக் கவனித்து வருகிறது.












Click it and Unblock the Notifications