வங்கதேசத்தில் 27 பேர் பலியாக காரணமாக இருந்த ஜெட் விமானம்! சீனாவில் தயாரிக்கப்பட்டதாம்! வெளியான தகவல்
டாக்கா: வங்கதேசத்தில் நேற்றைய தினம் ஜெட் விமானம் அங்குள்ள கல்லூரியில் மோதி விபத்திற்குள்ளானது. இதற்கிடையே விபத்தில் சிக்கியது சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பது இப்போது தெரிய வந்துள்ளது. சீனா தனது போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களை உலக நாடுகளுக்குக் கொடுத்தாலும் அதில் பல குறைபாடுகள் உள்ளன. அவ்வப்போது விபத்தில் சிக்குவது தொடர்கதையாகிறது.
வங்கதேச ராணுவத்திற்குச் சொந்தமான விமானம் நேற்று அங்குள்ள கல்லூரி வளாகத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும், சுமார் 200 பேர் காயமடைந்தனர். நேற்று நடந்த விபத்து வங்கதேச வரலாற்றில் மிக மோசமான விபத்தாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த விபத்து தொடர்பாகச் சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்டது
அதாவது வங்கதேசத்தில் விபத்தில் சிக்கிய இந்த ஜெட் விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்ட எஃப்-7 பிஜிஐ ரக விமானமாகும். இந்த விபத்து நேற்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:06 மணிக்கு நடந்துள்ளது. அந்த விமானம் பயிற்சிக்குப் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. வங்கதேச தலைநகர் டாக்காவில் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் என்ற கல்லூரியில் மோதியுள்ளது.
அங்குக் கல்லூரியில் வகுப்புகள் நடந்தபோது தான், இந்தச் சீன ஜெட் விமானம் விழுந்து நொறுங்கி உள்ளது.. இந்த விபத்திற்குத் துல்லியமாக என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து ராணுவ அதிகாரிகளும், மீட்புப் பணியாளர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், ஜெட் விமானம் விழுந்தபோது வளாகத்தில் இருந்து பயங்கரச் சத்தம் கேட்டதாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்தனர். இந்தச் சீன விமானம் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பழைய மாடல்
வங்கதேச விமானப் படையின் பழமையான விமானங்களில் ஒன்று இந்த எஃப்-7 பிஜிஐ விமானம்.. இது சீனாவின் செங்டு எஃப்-7 ரகத்தின் மேம்படுத்தப்பட்ட மாறுபாடு ஆகும். இது சோவியத் காலத்து மிக்-21 ரகத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது சோவியத்தின் மிக் 21 ஜெட்டை அடிப்படையாகக் கொண்டு சீனா தனது நாட்டிற்கு செங்டு எஃப்-7 (Chengdu F-7) ரக விமானத்தை உருவாக்கியது. அதன் சர்வதேச ஏற்றுமதி வெர்ஷன் தான் F-7 BGI ஆகும். இதுதான் இப்போது விபத்தில் சிக்கியுள்ளது.
உற்பத்தியே இல்லை
இந்த செங்டு ஜே-7 போர் விமானம் 1965 முதல் 2013 வரை சீனாவில் தயாரிக்கப்பட்டது. உற்பத்தி நிறுத்தப்பட்டாலும் கூட இது இன்னும் பல விமானப் படைகளில் இடைமறிப்பு விமானமாக (interceptor aircraft) பயன்படுத்தப்படுகிறது. சீனா ராணுவத்திலும் இது முக்கியமான ஒரு விமானமாக இருந்து வருகிறது.
மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த விமானம் அவுட்டேட் ஆனது போல தோன்றும். ஆனால், இன்னுமே வங்கதேச விமானப் படையில் பிரதான ஜெட் விமானமாக இந்த செங்டு ஜே-7 போர் விமானம் இருக்கிறது. குறைந்த விலை மற்றும் நம்பகத்தன்மை காரணமாக இந்த செங்டு எஃப்-7 ஜெட் விமானத்தை தான் வங்கதேசத்தில் பைலட் பயிற்சி மற்றும் இலகுரக போர் நடவடிக்கைகளுக்காக வங்கதேசம் பயன்படுத்துகிறது. இந்த விமானங்களின் கடைசி பேட்ச் 2013ஆம் ஆண்டில் சீனாவால் வங்கதேசத்திற்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
விபத்தில் சிக்குவது முதல்முறை இல்லை
அதேபோல செங்டு ஜே-7 விமானம் கடந்த காலங்களில் பல்வேறு விமானப் படைகளில் தொடர்ச்சியான பல முறை விபத்துகளில் சிக்கியுள்ளன. இயந்திரக் கோளாறுகள், தொழில்நுட்பக் குறைபாடுகள் மற்றும் விமானியின் தவறுகள் காரணமாக விபத்துகளில் சிக்கியுள்ளன.
சமீபத்தில், மியான்மர் விமானப்படைக்குச் சொந்தமான செங்டு ஜே-7 போர் விமானம் ஜூன் 10ம் தேதி சஃபைங் பிராந்தியத்தில் உள்ள பேல் டவுன்ஷிப்பில் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்பு 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜே-7 ரக விமானம் சீனாவின் ஹூபே மாகாணத்தின் மத்திய நகரமான சியாங்யாங்கில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் விழுந்து நொறுங்கியது.












Click it and Unblock the Notifications