பதவி விலகும் முகமது யூனுஸ்.. வங்கதேசத்தில் நாளை நாடாளுமன்ற தேர்தல்.. கள நிலவரம் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கவிழ்ந்தது. அதன்பிறகு, வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான், வங்கதேசத்தில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் 50 சதவீதத்துக்கும் மேலானவை பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், அங்குள்ள அரசியல் நிலவரம் இங்கு பார்க்கலாம்.

வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா செயல்பட்டு வந்தார். இவர் நம் நாட்டுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் கடந்த 2024ம் ஆண்டு மத்தியில் வங்கதேசத்தில் குழப்பம் நீடித்தது. 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மாணவர்கள் போராட்டம் வன்முறையானது.

ஹசீனா இந்தியாவில் தஞ்சம்

இந்த வன்முறையை தொடர்ந்து ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார். இதையடுத்து இடைக்கால அரசு அமைந்தது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார். இவர் தலைமையில் வங்கதேசத்தில் நிர்வாகம் நடந்து வந்தது. இருப்பினும் தொடர்ந்து அங்கு வன்முறை அரங்கேறி வருகிறது.

நாளை நாடாளுமன்ற தேர்தல்

இந்நிலையில் தான், வங்கதேசத்தில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடும் பதற்றத்துக்கு நடுவே இந்த தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை அமைதியாக நடத்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளதாவது:

50 சதவீத வாக்குச்சாவடி பதற்றம்

‛‛சுமார் 90 சதவீத வாக்குப்பதிவு மையங்கள் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். நாடு முழுவதும், குறிப்பாக தலைநகர் டாக்காவில் கூடுதல் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்படும். காவல்துறை தகவலின்படி சுமார் 43,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் பதற்றமானவை, மித பதற்றமானவை என்று 24,000 மையங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இது 50 சதவீதத்துக்கும் அதிகமாகும். இந்த இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும்.தலைநகர் டாக்காவில் மட்டும் உள்ள 2,131 மையங்களில் 1,614 மையங்கள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது வங்கதேச வரலாற்றில் இதுவரை இல்லாததாக உள்ளது.

கண்காணிப்பு தீவிரம்

இதனால் சில இடங்களில் காவல்துறையினர் உடல் கேமராக்களை அணிந்து கண்காணிப்பார்கள். நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் ராணுவம் பயன்படுத்தப்பட உள்ளது.

நாட்டில் மொத்தம் 12.77 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் சுமார் 3.58 சதவீதம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலுடன் சேர்த்து 84 அம்ச சீர்திருத்த முன்மொழிவு குறித்த பொது வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது என்பது மிகவும் முக்கியமானது.

எந்தெந்த கட்சிகள் போட்டி

மேலும் இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேரடி போட்டி என்பது மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) மற்றும் முன்னாள் கூட்டணி கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி இடையே இருக்கிறது.

பிஎன்பி கட்சியை தற்போது கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் வழிநடத்தி வருகிறார். அதேபோல் ஜமாத் இ இஸ்லாமி கட்சி நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டது. மதஅடிப்படைவாதத்துடன் பாகிஸ்தானுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள கட்சியாக அது உள்ளது.

இதனால் ஜமாத் இ இஸ்லாமி வென்றால் நம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும். இருப்பினும் பல கருத்து கணிப்புகள் தாரிக் ரஹ்மானின் என்சிபி கட்சிக்கு சாதகமாக வந்துள்ளன. இதுதவிர மாணவர்கள் அமைப்பினர் தொடங்கிய என்சிபி (National Citizen party)கட்சியும் தேர்தலில் களம் காண்கிறது. இந்த தேர்தல் முடிந்து புதிய அரசு அமையும் பட்சத்தில் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் ஆட்சி முடிவுக்கு வர உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+