இந்தியாவுக்கு பேராபத்து.. பாகிஸ்தானிடம் 24 போர் விமானங்களை வாங்கும் வங்கதேசம்? JF 17-னின் பின்னணி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கும், நமக்கும் கடும் மோதல் போக்கு உள்ளது. அதேபோல் வங்கதேசமும் இப்போது நம்மை சீண்டி வருகிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் 400 மில்லியன் முதல் 700 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் 16 முதல் 24ஜேஎஃப் 17 தண்டர் பிளாக் III எனும் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஜேஎஃப் 17 ரக போர் விமானங்கள் என்பது என்ன? இதனால் இந்தியாவுக்கு எப்படி பிரச்சனை வரும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
பயங்கரவாதிகளை வளர்த்து விடும் பாகிஸ்தான்.. நமக்கு எப்போதும் எதிரியாக உள்ளது. சமீபத்தில் தான் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே யுத்தம் நடந்து முடிந்தது. அதேபோல் இன்னொரு புறம் உள்ள வங்கதேசம் நம் நாட்டை தொடர்ந்து சீண்டி வருகிறது.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த மாணவர்கள் வன்முறையை தொடர்ந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்து ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்தார். அதன்பிறகு வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. அதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார்.
முகமது யூனுஸ் பொறுப்பேற்றது முதல் நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமாகி உள்ளது. எல்லையில் தேவையில்லாத பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது பாகிஸ்தானும், வங்கதேசமும் இணைந்து செயல்பட தொடங்கி உள்ளன. சமீபத்தில் துபாயில் விமான கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியின்போது தனது நட்பு நாடுகளுக்கு ஜேஎஃப் 17 தண்டர் பிளாக் III போர் விமானங்களை விற்பனை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்தது. அதன்படி இந்த போர் விமானங்களை வங்கதேசம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது 400 மில்லியன் முதல் 700 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் 16 முதல் 24 போர் விமானங்களை பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் வாங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில் வங்கதேசத்தின் வரலாற்றில் அதிகபட்ச போர் விமான கொள்முதல் இதுவாக இருக்கும்.
தற்போது வங்கதேசத்தின் விமானப்படை பலவீனமாக உள்ளது. வங்கதேசம் தனது பழைய எஃப் 7 BG/MG, MiG-29 போர் விமானங்கள், Yak-130 பயிற்சி விமானங்களை தான் பயன்படுத்தி வருகிறது. நவீன தொழில்நுட்பம் கொண்ட விமானங்கள் வங்கதேசத்திடம் இல்லை. இதற்கிடையே தான் 2030ம் ஆண்டுக்குள் வங்கதேசம் தனது விமானப்படையை பலப்படுத்தும் திட்டத்தை முன்வைத்துள்ளது.
இதனால் வங்கதேசம், பாகிஸ்தானிடம் இருந்து புதிய போர் விமானங்களை வாங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் போர் விமானங்களை வாங்கும்போது அதிகப்படியான நிதி செலவு ஏற்படும். ஆனால் வங்கதேசத்தின் பொருளாதாரம் சிறப்பாக இல்லை. மந்த நிலையில் உள்ளது.
இதனால் விலை குறைந்த அதேநேரத்தில் தொழில்நுட்பத்தில் ஓரளவு மேம்பட்ட விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி JF-17 தண்டர் பிளாக் ரக போர் விமானம் வங்கதேசத்தை கவர்ந்துள்ளது. இதனால் வங்கதேசம், ஜேஎப் 17 தண்டர் பிளாக் III ரக போர் விமானங்களை பாகிஸ்தானிடம் இருந்து வாங்க அதிக வாய்ப்புள்ளது.
இந்த ஜேஎஃப் 17 தண்டர் பிளாக் III போர் விமானம் என்பது 4.5ம் தலைமுறையை சேர்ந்தது. இது பாகிஸ்தான் - சீனாவின் கூட்டு தயாரிப்பகாகும். மாக் 1.8 வேகத்தில் செல்லக்கூடியது. வானில் 55,500 உயரம் வரை பறந்து செல்லும் தன்மை கொண்டது. கேஎல்ஜே -7ஏ AESA ரேடாரில் இயங்கும். மல்டிரோல் விமானமான இது 9000 கிலோ எரிபொருள் டேங்கை கொண்டுள்ளது. மொத்தம் 14.326 மீட்டர் நீளம் கொண்ட இந்த விமானத்தின் இறக்கைகள் 9.44 மீட்டராகும். இந்த விமானத்தின் உயரம் 4.57 மீட்டராகும். அதிகபட்சமாக 13,500 கிலோ எடையை சுமந்து சென்று இந்த விமானத்தால் தாக்குதல் நடத்த முடியும். கிட்டத்தட்ட நம் நாட்டின் தேஜஸ் விமானத்தை போன்று செயல்பாட்டை இது கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக பாகிஸ்தானிடம் இருந்து தான் 1971ல் வங்கதேசம் தனி நாடாக மாறியது. இதற்கு நம் நாடு தான் உதவி செய்தது. அதன்பிறகு கடந்த 54ஆண்டுகளாக இந்த இருநாடுகளும் பகையாளியாக இருந்து வந்தன. ஆனால் கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். அதன்பிறகு இருநாடுகள் இடையேயான உறவு சுமூகமான நிலைக்கு வந்துள்ளது. 52 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் உளவுத்துறை, ராணுவ அதிகாரிகள் வங்கதேசம் சென்றனர்.
அதேபோல் வங்கதேசத்தின் ராணுவ அதிகாரிகள் பாகிஸ்தான் சென்றனர். தற்போது இருநாடுகளும் நட்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் ஜேஎஃப் 17 தண்டர் பிளாக் III போர் விமானங்களை வாங்கினால் நம் நாட்டுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவு தற்போது மோசமாக உள்ளது. இதனால் பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்களை வாங்கி வங்கதேசம் தனது விமானப்படையை பலமாக்குவது நம் நாட்டுக்கு தலைவலியாக மாறும் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications