முக்கிய அரசியல் புள்ளி வீட்டை பூட்டி தீவைப்பு.. 7 வயது சிறுமி பரிதாபமாக பலி! வங்கதேசத்தில் பதற்றம்
டாக்கா: வங்கதேசத்தில் இப்போது திடீரென மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்கு பிஎன்பி கட்சித் தலைவரின் வீட்டைப் பூட்டி, சில மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்தச் சம்பவத்தில் அந்தத் தலைவரின் 7 வயது மகள் ஆயிஷா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இரு மகள்கள் மிக மோசமாகக் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் அங்கு நாடு முழுக்க பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்தாண்டு வங்கதேசத்தில் நடந்த மிகப் பெரிய போராட்டம் எப்படி வன்முறையாக மாறியது என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது ஏற்பட்ட மோசமான வன்முறையில் தான் அங்கிருந்த ஹசீனா அரசு கவிழ்க்கப்பட்டது. அதன் பிறகு அங்கு இயல்பு நிலை திரும்பவே பல மாதங்களானது. இந்தச் சூழலில் தான் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

வங்கதேச வன்முறை
அங்கு ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த இளம் அரசியல் தலைவரான ஷெரிப் உஸ்மான் ஹாடி கடந்த வாரம் திடீரெனக் கொல்லப்பட்டார். அவர் அடுத்தாண்டு வங்கதேசத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். அதற்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை சுட்டார். இதில் படுகாயமடைந்த உஸ்மான் ஹாடி, மேல்சிகிச்சைக்காகச் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
உயிரிழப்பு
அங்கு அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சைப் பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து வங்கதேசத்தில் வன்முறைச் சம்பவங்கள் இப்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளன. அங்குள்ள லக்ஷ்மிபூர் சதர் உபாசிலாவில் உள்ள பிஎன்பி எனப்படும் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சித் தலைவரின் வீட்டில் சில மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். அந்த வீட்டை வெளியில் இருந்து பூட்டிய மர்ம நபர்கள், தீயிட்டனர்.. இந்தக் கொடூரத் தாக்குதலில் ஒரு குழந்தை உயிரிழந்தது. மேலும், மூவர் படுகாயமடைந்தாக வங்கதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பபானிகாஞ்ச் ஒன்றியத்தின் பிஎன்பி உதவி அமைப்புச் செயலாளரும் தொழிலதிபருமான பெலால் ஹொசைன் இல்லத்தில் தான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. நேற்று சனிக்கிழமை அதிகாலை இந்தத் தாக்குதல் நடந்தது. இந்த மோசமான சம்பவத்தில் பெலால் ஹொசைனின் ஏழு வயது மகள் ஆயிஷா அக்தர் பரிதாபமாக உயிரிழந்தார். பெலால் ஹொசைன் மற்றும் அவரது மற்ற இரு மகள்கள் மிக மோசமான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இரு மகள்கள் படுகாயம்
ஹொசைன் இப்போது பெலால் லக்ஷ்மிபூர் சதர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மகள்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயர் சிகிச்சைக்காக டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹொசைன் மகள்களுக்குச் சுமார் 50-60 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
என்ன நடந்தது!
யாரும் வெளியே தப்பிக்க முடியாத வகையில் சில சமூக விரோதிகள் வீட்டை வெளியில் இருந்து பூட்டி, பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாக பெலால் ஹொசைனின் தாயார் ஹஸேரா பேகம் குற்றஞ்சாட்டியுள்ளார். அதேநேரம் இந்த மோசமான செயலைச் செய்தது யார் என்பது அவருக்குத் தெரியவில்லை. இது தொடர்பாக அவர் பேசுகையில், "நான் இரவு உணவு சாப்பிட்டுவிட்டுத் தூங்கச் சென்றேன். அதிகாலை 1 மணியளவில் விழித்தபோது, எனது வீட்டிற்கு அருகே உள்ள என் மகனின் வீடு தீப்பிடித்து எரிவதைக் கண்டேன். இதையடுத்து அலறிக்கொண்டே வெளியே ஓடி வந்தேன்.
அவர்களைக் காப்பாற்ற முயன்றேன். இருப்பினும், வீட்டின் இரு கதவுகளும் வெளியிலிருந்து பூட்டப்பட்டிருந்தன. உள்ளே நுழைய முடியவில்லை. இறுதியில் என் மகன் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்தான்.. அதன் பிறகு அவனது மனைவி நஸ்மா மற்றும் கைக்குழந்தை வெளியே வந்தனர். அவர்களின் மற்ற மகள்கள் இன்னொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். இரு மகள் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். இருப்பினும், இளைய பேத்தி உயிரிழந்துவிட்டார்" என்றார்.












Click it and Unblock the Notifications