வங்கதேசத்தில் இருந்து நீந்தியே இந்தியா வந்த சிறுவன்.. காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
சாக்லேட் வாங்குவதற்காக வங்கதேசத்தில் இருந்து நீந்தி இந்தியாவிற்குள் நுழைந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
டாக்கா: சாக்லேட் வாங்குவதற்காக வங்கதேசத்தில் இருந்து சர்வதேச எல்லையைத் தாண்டி சிறுவன் ஒருவன் நீந்தியே இந்தியாவிற்குள் நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசம் கோமிலா மாவட்டத்தில் சால்டா நதிக்கரையோரத்தைச் சேர்ந்த அச்சிறுவனின் பெயர் எம்மான் உசேன் எனக் கூறப்படுகிறது. இவர் கடந்த வாரம் (ஏப்ரல் 13ம் தேதி) திரிபுரா மாநிலத்தில் உள்ள சிப்பாஹிஜாலா பகுதியில் உள்ள நதியில் நீந்தி வந்து கொண்டிருப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். அச்சிறுவன் அப்பகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்பதால், உடனடியாக இது குறித்து போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அச்சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர்.

சாக்லேட் வாங்க...
இதில் அச்சிறுவன் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், சர்வதேச எல்லையைக் கடந்து நீந்தியே இந்தியாவிற்குள் வந்ததும் தெரிய வந்தது. இரண்டு நாடுகளுக்கும் நடுவே போடப்பட்டிருந்த வயர் வேலியில் இருந்த இடைவெளியில் புகுந்து, இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளார். சிப்பாஹிஜாலா பகுதியில் உள்ள கடையில் விற்கப்படும் சாக்லேட்டை வாங்குவதற்காக அச்சிறுவன் கூறியுள்ளார்.

கைது
எனினும் இந்தியாவிற்குள் நுழைய போதுமான ஆவணங்கள் அச்சிறுவனிடம் இல்லாத காரணத்தால், சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்ததற்காக எல்லைப் பாதுகாப்புப் படையினர் அச்சிறுவனை போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட அச்சிறுவனிடம், இந்தியாவில் நுழைந்ததற்காக காரணம் பற்றி விசாரிக்கப்பட்டது.

முதன்முறையல்ல..
அப்பொழுது அவர் தான் தனக்கு பிடித்த இந்திய பிராண்ட் சாக்லேட்டை வாங்குவதற்காக நீந்தியே இந்தியாவிற்குள் வந்ததாக கூறியுள்ளார். அதோடு இதற்கு முன்னர் பலமுறை இப்படி நீந்தியே வந்து அந்த சாக்லேட்டை வாங்கிச் சென்றுள்ளதாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடரும் விசாரணை
முதற்கட்ட விசாரணையில் அச்சிறுவன் உண்மையிலேயே சாக்லேட் வாங்குவதற்காகத்தான் நீந்தி வந்தது தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், இதுதான் உண்மைக்காரணமா இல்லை அச்சிறுவன் இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைந்ததன் பின்னணியில் வேறு சதிச் செயல் காரணங்கள் இருக்கிறதா என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இதனால் நீதிமன்றம் அச்சிறுவனை 15 நாட்கள் சிறையில் வைக்க உத்தரவிட்டுள்ளது. விசாரணையின் முடிவில் உண்மைக் காரணம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications