திருமண விழாவில் மொத்த குடும்பமும் தீயில் பலி.. அதிர்ச்சியில் பேச முடியாமல் தவிக்கும் மணப்பெண்! சோகம்
பாக்தாத்: திருமண விழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒட்டுமொத்த குடும்பத்தைப் பறிகொடுத்த மணப்பெண் அதிர்ச்சியில் நிற்கிறார். இந்த மோசமான விபத்தில் என்ன நடந்தது என்பது குறித்துப் பார்க்கலாம்.
வடக்கு ஈராக் நகரமான ஹம்தானியாவில் கடந்த வாரம் திருமண விழா ஒன்று நடைபெற்றது. அதில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்து மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. சமீப காலங்களில் அந்நாட்டில் நடந்த மிக மோசமான தீ விபத்தாக இது பார்க்கப்படுகிறது.

இந்த தீ விபத்தில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இதில் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தோர் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை தரப்பட்டது. ஈராக் வரலாற்றில் திருமண விழாவில் நடந்த மிக மோசமான தீ விபத்தாக இது பார்க்கப்படுகிறது.
திருமண விழா: அங்கே வெகு சிறப்பாக இந்த திருமண விழா திட்டமிடப்பட்டிருந்தது. இதில் பல நூறு பேர் கலந்து கொண்டனர். அப்போது மணமக்களை வரவேற்கும் போது, அங்கே வானவேடிக்கைக்காக உள்ளே புஸ்வானம் போல வைத்துள்ளனர். அது அதிக உயரத்திற்குச் செல்லவே தீ பற்றியுள்ளது. மேலும், அங்கே அலங்காரத்திற்குப் பயன்படுத்தப் பொருட்கள் எளிதாக தீ பற்றும் வகையில் இருந்த நிலையில், தீ படுவேகமாக பரவியுள்ளது. இதனால் தான் பாதிப்பு இந்தளவுக்கு மிக மோசமாக இருந்துள்ளது.
இந்த மோசமான தீ விபத்தில் மணமக்கள் தப்பிவிட்ட போதிலும், அவர்கள் தாங்கள் நேசித்த அனைவரையும் இழந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இந்த மோசமான விபத்தில், மணப்பெண் ஹனீன் தனது தாய், சகோதரர் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரைப் பறிகொடுத்துள்ளார். அதேபோல அவரது கணவர் ரேவனின் உறவினர்கள் 15 பேர் இந்த கொடூர விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இறந்துவிட்டோம்: மணப்பெண் ஹனீன் குடும்பத்தில் பலரும் உயிரிழந்த நிலையில், அவரது தந்தையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இப்போது மருத்துவமனையில் இருக்கிறார். வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய இந்த காலம் அவர்களுக்கு மிகவும் கொடூரமான காலகட்டமாக மாறியுள்ளது. நாங்கள் என்னதான் விபத்தில் தப்பினாலும், உள்ளுக்குள் நாங்கள் இறந்துவிட்டோம் என்பதே உண்மை என்கிறார் கணவர் ரேவன்.
பேசவே முடியல: இந்த கொடூர விபத்து காரணமாக அதிர்ச்சியடைந்த தனக்கு பேசவே முடியவில்லை என்றும் ரேவன் கூறுகிறார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்த தீ விபத்திற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. இது ஒரு ஷார்ட் சர்க்யூட்டாக இருக்கலாம்.. ஆனால் உறுதியாக எனக்குத் தெரியாது. ஆனால் திடீரென கூரை தீ பற்றி எரிந்தது. அந்த இடம் சூடாக மாறுவதை உணர்ந்தோம். ஏதோ சத்தமும் கேட்க நான் கூரையைப் பார்த்தேன்.
அங்கே நைலான் மூலம் டிசைன் செய்த நிலையில், அது வேகமாகத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. சில நொடிகளில் தீ வேகமாகப் பரவிவிட்டது. நாங்கள் அங்கே வந்த போது, முதலில் மின்வெட்டு ஏற்பட்டது. மீண்டும் மின்சாரம் வந்த போது, மேலே தீ பரவிக் கொண்டிருந்தது. எனது மனைவி நீண்ட திருமண ஆடை அணிந்திருந்த நிலையில், அவரால் எளிதாக வெளியே வர முடியவில்லை.

கவலை: நான் அவரை தூக்கி வர வேண்டி இருந்தது. சமையலறை வழியாக நாங்கள் வெளியே வந்தோம். தீ விபத்தால் ஒரே நேரத்தில் பலரும் வெளியே வர முயன்ற நிலையில், பலருக்கும் காயம் ஏற்பட்டது. அவளுக்கும் காலில் காயம் ஏற்பட்டது. அவளது குடும்பத்தினர் பெரும்பாலானோர் இழந்துவிட்டோம். இப்போது அவரது தந்தையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அவர் உயிர் பிழைப்பாரா என்பதே இப்போது கவலையாக இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
இந்த மோசமான விபத்தால் மன ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அந்த தம்பதி, இந்த அதிர்ச்சியால் தங்களால் சொந்த கிராமத்தில் இருக்கவே முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஈராக்கில் சமீப காலத்தில் நடந்த மிக மோசமான தீ விபத்தாக இது இருக்கிறது.












Click it and Unblock the Notifications