போராட்டம்...பொருளாதார நெருக்கடிக்கு இடையே இலங்கையில் களை கட்டிய புத்தபூர்ணிமா கொண்டாட்டம்
பொருளாதார நெருக்கடி, அரசுக்கு எதிரான போராட்டங்களால் அசாதாரண சூழல் நிலவும் இலங்கையில் புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள் களைகட்டின.
பாங்காக்: உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்லாந்து, வியட்நாம், சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பெளத்த விகாரங்கள் ஒளி வெள்ளத்தில் மிதந்தன. பொருளாதார நெருக்கடி, அரசுக்கு எதிரான போராட்டங்களால் அசாதாரண சூழல் நிலவும் இலங்கையில் புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள் களைகட்டின.
கௌதம புத்தரின் பிறந்த தினத்தன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. அவரது போதனைகளின் அடிப்படையிலேயே பௌத்த மதம் பிறந்தது. கௌதம புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தா கௌதமா என்பதாகும். இவர் கி.மு. 563 - 483 காலகட்டத்தில் நேபாளத்தில் உள்ள லும்பினி என்னும் ஊரில் பிறந்தவர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் கௌஷிநகர் பகுதியில் தனது 80ஆவது வயதில் அவர் மறைந்தார்.
புத்த பூர்ணிமா பண்டிகைக்கு வேறு சில பெயர்களும் உண்டு. அதாவது புத்த ஜெயந்தி, விசாக், வைசாகா மற்றும் புத்தர் பிறந்தநாள் என்றும் இது அழைக்கப்படுகிறது. புத்த பூர்ணிமா பண்டிகையானது கௌதம புத்தரின் 2,584 ஆவது பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. புத்தருக்கு இந்த தினத்தில் தான் ஞானம் கிடைத்ததாக நம்பப்படுகிறது.
இந்தியாவில் பௌத்த மத மக்களுக்கு பீகார் மாநிலத்தில் உள்ள புத்த கயா என்னும் இடம் தான் மிக முக்கியமான வழிபாட்டு தலமாக உள்ளது. புத்தரின் வாழ்வியலோடு பெரும் தொடர்பு உள்ளதாக இந்த இடம் இருக்கிறது. இது தவிர கௌஷிநகர், லும்பினி, சார்நாத் ஆகிய இடங்களும் பௌத்த மத மக்களுக்கு சிறப்புக்குரிய வழிபாட்டுத் தலங்களாக இருக்கின்றன.

புத்தருக்கு ஞானம்
புத்த கயா தளத்தில் தான் கௌதம புத்தருக்கு ஞானம் பிறந்தது என்று நம்பப்படுகிறது. அதன் பிறகு, சார்நாத் நகரில் முதல் முறையாக அவர் தர்மத்தை போதிக்க தொடங்கினார். புத்தரின் பிறப்பு, அவருக்கு ஞானம் கிடைத்தது, அவரது மறைவு ஆகிய அனைத்துமே இந்த வைகாசி மாத பௌர்ணமி நாளில் நிகழ்ந்தவை என்று பௌத்த மத மக்கள் பெரிதும் நம்புகின்றனர்.

புத்த பூர்ணிமா
இந்த ஆண்டு மே 15ஆம் தேதி நண்பகல் 12.45 மணிக்கு தொடங்கிய பூர்ணிமா திதி, இன்று மே 16ஆம் தேதி காலை 9.43 மணி வரையிலும் நீடிப்பதால் இன்றும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. புத்தரின் பிறப்பு, ஞயாணோதயம், புத்தரின் இறப்பு ஆகிய மூன்றுமே மே மாதம் பவுர்ணமி நாளில் புத்த பூர்ணிமாவாக பெளத்தர்களால் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புத்த விகாரையில் வழிபாடு
புத்த பூர்ணிமா தினத்தில், உலகெங்கிலும் பௌத்த மதத்தைப் பின்பற்றக் கூடிய மக்கள் புத்தரை வழிபட்டு அவரது ஆசிகளையும், அறிவையும் தர வேண்டுகின்றனர். இந்த நாளில் பலர் புத்தமத கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவதுடன், ஏழை மக்களுக்கு தேவையான பொருட்களை தானமாக வழங்கினர். புத்த பூர்ணிமா தினத்தை முன்னிட்டு தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே உள்ள தாமக்யா விகாரை விளக்கு ஒளியில் ஜொலித்தது. வெள்ளுடை தரித்த ஏராளமான பெளத்தர்கள் விகாரையில் விளக்கேற்றி வழிபட்டனர்.

இலங்கையில் புத்த பூர்ணிமா
இதே போல பொருளாதார நெருக்கடி, அரசுக்கு எதிரான போராட்டங்களால் அசாதாரண சூழல் நிலவும் இலங்கையிலும் புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள் களைகட்டின. இதற்காக ஊரடங்கு நிலை முற்றிலுமாக விலக்கப்பட்டது. கொழும்பு நகர வீதிகள் விளக்கு ஒளியில் ஜொலித்தன. அதிபர் அலுவலகம் எதிரே புத்த பூர்ணிமாவை குறிக்கும் சில வண்ண கொடிகள் பறந்தாலும் கூட கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால் மட்டுமே போராட்டம் ஓயும் என்று அவர்கள் பிடிவாதமாக ஒரே குரலில் முழங்கினர்.












Click it and Unblock the Notifications