பாபா சித்திக்கை கொன்ற பிஷ்னோய் கேங்கை.. பயன்படுத்துவதே இந்திய ஏஜெண்டுகள்தான்! மீண்டும் சீண்டும் கனடா
ஒட்டாவா: ஏற்கனவே இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கேங் உறுப்பினர்களுக்கு இந்தியா ஏஜெண்டுகள் உடன் தொடர்பு இருக்கலாம் என்று கனடா அரசு மீண்டும் ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்டியுள்ளது. இது இரு நாட்டு உறவை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல ஒரு உறவே இருந்து வந்தது. ஆனால் ஹர்தீப் சிங் நிஜார் படுகொலைக்குப் பிறகு நிலைமை மொத்தமாக மாறியது.

இரு நாட்டு உறவு: கடந்த 2023ல் ஹர்தீப் சிங் நிஜார் கனடாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்திற்கு இந்தியா அதிகாரிகள் சிலருக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா கடந்த சில மாதங்களுக்கு முன்பு எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் குற்றஞ்சாட்டியது. இதற்கான ஆதாரத்தைக் கனடா தரவில்லை. ஆனாலும், இந்திய அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக மட்டுமே தொடர்ந்து கூறியது. இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்து இருந்தது. இதுவே இரு நாட்டு உறவு மோசமாகக் காரணமாகும்.
இதற்கிடையே இந்தப் பிரச்சினை இப்போது மீண்டும் வெடித்துள்ளது. அதாவது நிஜ்ஜார் கொலை வழக்கில், கனடாவின் இந்தியத் தூதர் சஞ்சய் குமார் வர்மாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கனடா மீண்டும் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் குற்றஞ்சாட்டி இந்தியாவைச் சீண்டியிருக்கிறது.. இது மிகப் பெரிய குற்றச்சாட்டு என்பதால் இந்தியா இதற்குக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று மறுத்துள்ள இந்திய அரசு, கனடாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தூதர்கள் வாபஸ்: காலிஸ்தான் பிரிவினைவாதத்தை கட்டுப்படுத்த தவறும் கனடா, தனது தவறுகளை நியாயப்படுத்த இதைச் செய்வதாகக் குற்றஞ்சாட்டியது. மேலும், கனடாவுக்கான இந்தியத் தூதர்களையும் திரும்ப அழைத்தது. அதேபோல கனடாவும் தனது தூதர்கள் அனைவரையும் திரும்பப் பெற்றுள்ளது. இதற்கிடையே கனடா நாட்டு போலீசார் இந்திய அரசு மீது மீண்டும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அதாவது லாரன்ஸ் பிஷ்னோய் கேங் மூலம் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாக மிகப் பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
மீண்டும் சீண்டும் கனடா: இது குறித்து கனடா நாட்டு போலீஸ் கமிஷனர் மைக் டுஹேன் கூறுகையில், "அவர்கள் (இந்திய அரசு) தெற்காசியச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறிவைக்கிறார்கள். அதிலும் குறிப்பாகக் கனடாவில் உள்ள காலிஸ்தானி ஆதரவாளர்களைக் குறிவைக்கிறார்கள். அவர்கள் ஆர்கனைஸ்டு க்ரைம் பிரிவுகளைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக பிஷ்னோய் கும்பல் பயன்படுத்துகிறார்கள். அந்த கேங் உறுப்பினர்களுக்கும் இந்திய அரசு ஏஜெண்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
கொலை, மிரட்டி பணம் பறித்தல், ஆகிய குற்றங்களுக்கு இந்திய அரசு ஏஜெண்டுகளை குற்றஞ்சாட்டுகிறீர்களா என்ற கேள்விக்கு மைக் டுஹேன் ஆமாம் என்றே பதிலளித்தார். இது இரு தரப்பு உறவை மிக மோசமாகப் பாதிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த லாரன்ஸ் பிஷ்னோய் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இப்போது சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
லாரன்ஸ் பிஷ்னோய்: லாரன்ஸ் பிஷ்னோய் கேங் தான் இப்போது மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவார் என்சிபி கட்சியின் முக்கிய பிரமுகர் பாபா சித்திக்கை கொலை செய்தது. மேலும், சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் கொடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்த கும்பலின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. அதன் உறுப்பினர்களையும் தேடி வருகிறது. அப்படியிருக்கும் போது அந்த கேங்கிற்கும் இந்தியா ஏஜெண்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கனடா அரசு கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications