80% விசா நிராகரிப்பு! இந்தியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அமெரிக்கா போலவே கனடாவும் தடாலடி!
ஒட்டாவா: டிரம்ப் அதிபரான பிறகு வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்து. இதற்கிடையே அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவும் இப்போது இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ளதால் இந்தியர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். இதனால் கனடாவைத் தவிர்க்கும் இந்தியர்கள், ஐரோப்பிய நாடுகள் பக்கம் திரும்பியுள்ளனர்.
இந்திய மாணவர்கள் பலரும் அமெரிக்கா சென்று படிக்கவே ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க மாணவர் விசா கிடைப்பது சிக்கலாகவே இருந்தது. அதிலும் டிரம்ப் வந்த பிறகு வெளிநாட்டு மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள ஆரம்பித்தனர். இதற்கிடையே அமெரிக்காவைத் தொடர்ந்து இப்போது கனடாவிலும் இந்தியர்கள் சிக்கலை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

80% நிராகரிப்பு
அதாவது கடந்த 2025ஆம் ஆண்டில், கனடாவில் இந்திய மாணவர் விசா விண்ணப்பங்களில் 80% நிராகரிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. கடந்த பத்தாண்டுகளில் இந்தளவுக்கு மாணவர் விசா நிராகரிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த தகவல்களைக் கனடா குடியுரிமை அமைப்பு உறுதி செய்துள்ளது.. பல நாட்டு மாணவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் இந்திய மாணவர்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்களும் கணிசமான எண்ணிக்கையில் நிராகரிக்கப்பட்டுள்ளன. கனடாவின் மாணவர் சேர்க்கை விவரங்களில் இந்த மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது 2024ல் சுமார் 1.88 லட்சம் புதிய இந்திய மாணவர்களை மட்டுமே கனடா அனுமதித்துள்ளது.
ஜெர்மனி
அமெரிக்கா மற்றும் கனடாவில் இதுபோல பிரச்சினை இருப்பதால் இந்திய மாணவர்கள் வேறு நாடுகளுக்குச் செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. கனடாவுக்குப் பதிலாக ஐரோப்பிய நாடான ஜெர்மனி செல்ல இந்திய மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. இப்போது 31% இந்திய மாணவர்களின் விருப்பமான நாடாக ஜெர்மனி உருவெடுத்துள்ளது. 2022ல் 18% மாணவர்கள் கனடா செல்ல விருப்பம் தெரிவித்த நிலையில், 2024ல் அது 9% ஆகக் குறைந்துள்ளது.
பின்னணி
ஒரு பக்கம் அமெரிக்காவும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளைக் கடுமையாக்கி வரும் சூழலில், கனடாவும் கிட்டத்தட்ட அதுபோன்ற நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளது.. வெளிநாட்டினர் அதிகம் வருவதால் வீட்டு வாடகை உயர்ந்துள்ளது. உட்கட்டமைப்பு மீது அழுத்தம் அதிகரித்துள்ளது.. இதனால் அங்கு ஆளும் தரப்பு மீது மக்கள் கோபம் அதிகரித்துள்ள நிலையில், அதைச் சமாளிக்கவே கனடா விசா நடவடிக்கையில் கெடுபிடி காட்ட ஆரம்பித்துள்ளது.
இனி வரும் காலங்களில் வலுவான நிதி ஆவணங்கள், குறுகிய கால படிப்புகள், மொழி புலமை என பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வோருக்கு மட்டுமே விசா வழங்கக் கனடா முடிவு செய்துள்ளது. மேலும், குறைந்தபட்ச நிதித் தேவை CA$20,000ஆக, அதாவது முன்பு இருந்த அளவை விடவும் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.. அதேபோல வேலைக்கான விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
கடுமையாக்கப்படும் ரூல்ஸ்
கல்லூரி பட்டதாரிகளுக்கான மொழித் தேவைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. கனடாவில் கல்லூரி படிப்பை முடிப்போர் அங்கு வேலை செய்ய சில தளர்வுகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், அதிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கனடாவில் கல்லூரிப் படிப்பை முடித்தால் அங்கு ஈஸியாக நிரந்தர குடியுரிமை வாங்கலாம் என்பதால் பலரும் அங்குக் கல்லூரி படிப்பைத் தேர்ந்தெடுத்த நிலையில், இப்போது அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
நடப்பு 2025ஆம் ஆண்டில் கனடா 437,000 படிப்பு பெர்மிட்களை (மாணவர் விசா) வழங்கவுள்ளது.. இது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 10% குறைவாகும். அவை 73,000 மேற்படிப்புகளுக்கும், 243,000 இளங்கலை படிப்புகளுக்கும், 120,000 இதர மாணவர்களுக்கும் ஒதுக்கப்படும்.
ஜெர்மனி செல்ல ஆர்வம்
கனடா இப்படி கட்டுப்பாடுகளை அதிகத்து வரும் சூழலில், இந்திய மாணவர்கள் ஜெர்மனி செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஜெர்மனியின் வளர்ந்து வரும் பொருளாதாரம், அரசு பல்கலைக்கழகங்களின் குறைந்த கல்விக் கட்டணம், ஆங்கில மொழி பாடங்கள் அதிகரிப்பது ஆகியவை ஜெர்மனியை நோக்கி இந்திய மாணவர்களை ஈர்க்கின்றன.
ஜெர்மனியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய மாணவர் சேர்க்கை இருமடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. 2023இல் 49,500ஆக இருந்த இந்த எண்ணிக்கை, 2025இல் கிட்டத்தட்ட 60,000ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் வட அமெரிக்கா நாடுகளை விடவும் ஜெர்மனி தரமான கல்வியை வழங்குகிறதாம். மேலும், செலவுகளும் குறைவாக இருக்கிறதாம்..
இதுபோக பிரான்ஸ், பின்லாந்து, ஆஸ்திரேலியா, தென் கொரியா, ஜப்பான், மலேசியா மற்றும் மத்திய கிழக்கு போன்ற உலகின் மற்ற நாடுகளும் கூட மாணவர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications