பாகிஸ்தான் தேர்தல் ரிசல்ட் 2024: ஆட்டத்தை தொடங்கும் இம்ரான் கான்.. 154 தொகுதிகளில் முன்னிலை
இஸ்லாமாபாத்: இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் நேற்று பொதுத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் கடந்த 7ம் தேதி நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் சுமார் 25 பேர் உயிரிழந்தனர். 8ம் தேதி அதாவது நேற்று தேர்தல் நடக்க இருந்த நிலையில், நேற்று முன்தினம் குண்டு வெடிப்பு நடந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டு நேற்று தேர்தல் நடைபெற்றது. துண்டிக்கப்பட்ட இணைய சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், அங்கிருந்து வரும் தகவல்களின்படி முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு வேட்பாளர்கள் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பாகிஸ்தானின் பிரபல நெடிசன் ஒருவர் பகிர்ந்துள்ள தகவலின்படி, இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி (பிடிஐ) கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் இக்கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 154 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.
அதேபோல பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சிகள் தலா 47 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. முத்தாஹிதா குவாமி இயக்கம் 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது. பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கும் நேரடியாக மக்கள் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சிறையில் இருக்கும் நிலையில் அவரது கட்சியின் சின்னமான பேட் சின்னத்தை அந்நாட்டு தேர்தல் ஆணையம் ரத்து செய்திருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அவர் நாடியிருந்தார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் முடிவை உச்சநீதிமன்றம் அங்கீகரித்தது. ஊழல் வழக்கில் சிறை, சின்னம் ரத்து செய்யப்பட்டது என பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் இம்ரான் கான் இருந்தாலும், அவரது கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் முன்னணியில் இருப்பது பாகிஸ்தான் அரசியலில் விவாதங்களை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications