தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம்
பெய்ஜிங்: ஒரு சவரன் தங்கம் விலை ஒன்றரே கால் லட்சம் என்கிற அளவில் போய்விட்ட நிலையில், ஏழை மக்கள் எட்டாத உயரத்திற்கு தங்கம் போய்விட்டதே என்று ஏக்கத்துடன் பார்க்கிறார்கள். ஆனால் உலகின் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளோ, அதாவது உலக நாடுகளின் ரிசர்வ் வங்கிளோ, விலையை பற்றி கவலைப்படாமல் தங்கம் வாங்கி குவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 17 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உலக தங்க கவுன்சில் புள்ளி விவரத்தை கூறியுள்ளது.
உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழல் காரணமாக மக்கள் பலர், இந்திய ரூபாய், அமெரிக்க டாலர் உள்பட பல்வேறு நாணயங்களின் மதிப்பை வீழ்ச்சியை கண்டு பயந்து தங்கத்தில் தான் முதலீடு செய்கிறார்கள். பங்கு சந்தையில் முதலீடு செய்வது ஆபத்தானது என்று கருதி தங்கத்தில் முதலீடு செய்வது உலகம் முழுவதும் அதிகரித்துள்ளதால், தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இது ஒருபுறம் எனில், விலைவாசி உயர்வால் ஏற்படும் பொருளாதார சரிவை தடுக்கவும், நாணய மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்கவும் உலக நாடுகள் தங்கத்தை வாங்கி கடந்த ஓராண்டாகவே குவித்து வருகின்றன.

அண்மையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் சற்றுமாறி இருந்தது. ஆனால் தற்போது உலக நாடுகளின் மத்திய வங்கிகள் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் தங்க கொள்முதலை அதிகரித்துள்ளன. மார்ச் மாதத்தில் பதிவான குறிப்பிடத்தக்க நிகர விற்பனைக்கு பிறகு, ஏப்ரலில் மொத்தம் 17 டன் தங்கத்தை மத்திய வங்கிகள் நிகரமாக வாங்கியுள்ளன என்று உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், ஏப்ரல் மாத தங்க கொள்முதலில் போலந்து தேசிய வங்கி 14 டன் தங்கம் வாங்கி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் 2026-ம் ஆண்டில் இதுவரை மட்டும் போலந்தின் மொத்த தங்க கொள்முதல் 45 டன்னாக உயர்ந்துள்ளது. தற்போது போலந்து நாட்டின் மொத்த கையிருப்பில் சுமார் 30 சதவீதம் தங்கமாக உள்ளது. சீன மக்கள் வங்கியும் ஏப்ரல் மாதத்தில் 8 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. இது 2024-ம் ஆண்டு டிசம்பருக்கு பிறகு ஒரே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய கொள்முதலாக பார்க்கப்படுகிறது,
இதன்மூலம் சீனா தொடர்ந்து 18-வது மாதமாக தங்கம் வாங்கும் போக்கை நீட்டித்துள்ளது. தற்போது சீனாவின் தங்க கையிருப்பு மொத்தம் 2,322 டன்னாக உள்ளது. செக் குடியரசு மத்திய வங்கி ஏப்ரலில் 2 டன் தங்கம் வாங்கியதன் மூலம் தொடர்ந்து 38 மாதங்களாக தங்க கொள்முதல் மேற்கொண்டு வருகிறது.
மறுபுறம், ரஷியா மத்திய வங்கி தொடர்ந்து நான்காவது மாதமாக தங்கத்தை விற்பனை செய்திருக்கிறது. ஏப்ரலில் மட்டும் 6 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. உஸ்பெகிஸ்தான் ஏப்ரலில் 1 டன் தங்கத்தை விற்றிருந்தாலும், 2026-ம் ஆண்டில் இதுவரை 24 டன் தங்கத்தை நிகரமாக வாங்கிய நாடாக உள்ளது. போலந்திற்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது. கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளின் மத்திய வங்கிகளே உலகளாவிய தங்க கொள்முதலை முன்னெடுத்து வருகின்றன. கடந்த 36 மாதங்களில் இந்த இரு பிராந்தியங்களும் மாதத்திற்கு சராசரியாக முறையே 12 டன் மற்றும் 11 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. உலக மத்திய வங்கிகளின் மொத்த சராசரி மாதாந்திர நிகர கொள்முதல் 29 டன் என பதிவாகியுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் போலந்து மற்றும் சீனா தங்க கொள்முதலில் முன்னிலை வகித்தாலும், கடந்த ஒரு தசாப்தத்தில் தங்க கையிருப்பை கணிசமாக உயர்த்திய மத்திய வங்கிகளில் இந்திய ரிசர்வ் வங்கியும் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. 2014-ம் ஆண்டில் 557 டன்னாக இருந்த ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு, 2026-ல் 880 டன்னைத் தாண்டியிருக்கிறது. 12 ஆண்டுகளில் 58 சதவீதம் அதிகம் ஆகும். அமெரிக்க டாலரின் மீதான சார்பைக் குறைப்பது, உலக பொருளாதார நிச்சயமற்ற நிலை, பணவீக்க அபாயங்கள் மற்றும் வெளிநாட்டு நாணய கையிருப்பை பலப்படுத்தும் முயற்சிகள் ஆகிய காரணங்களால், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை பாதுகாப்பான சொத்தாகக் கருதி, விலையை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து குவித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications