ரூ.116 லட்சம் கோடி.. "எங்கள் பிட்காயின்களை அமெரிக்கா திருடிவிட்டது.." சீனா பகீர் குற்றச்சாட்டு
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே பதற்றமான ஒரு உறவு நிலவி வருகிறது. இதற்கிடையே தங்கள் நாட்டில் இருந்த கிரிப்டோ மைனிங் மையத்தில் இருந்து அமெரிக்கா சுமார் 1.27 லட்சம் பிட்காயின்களை திருடிவிட்டதாகச் சீனா பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.116 லட்சம் கோடியாகும்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. அதிலும் குறிப்பாக டிரம்ப் அதிபரான பிறகு இரு தரப்பிற்கும் இடையே மோதல் அதிகரித்தது. இரு நாடுகளும் மாறி மாறி வரி போட்டது. சீனாவும் ரேர் எர்த் மெடல் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் ஒருவிதப் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

அமெரிக்கா சீனா
கடந்த மாதம் தான் இந்தப் பதற்றம் ஓரளவுக்கு முடிந்தது. இரு நாட்டு அதிபர்களும் நேரில் சந்தித்துக் கொண்ட நிலையில், வர்த்தகப் பதற்றம் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. இதற்கிடையே அமெரிக்க அரசு மீது சீனா இப்போது பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
அதாவது 2020ஆம் ஆண்டில் தங்கள் நாட்டில் இருந்த கிரிப்டோ மைனிங் மையத்தில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில் 13 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பிட்காயின் திருடப்பட்டதாகவும் இதற்குப் பின்னணியில் அமெரிக்க அரசு இருப்பதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது. CVERC எனப்படும் சீனாவின் தேசிய கம்ப்யூட்டர் வைரஸ் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் மையம் இது குறித்து விரிவான ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது.
1.27 லட்சம் பிட்காயின்கள்
அதில் அப்போது உலகின் மிக பெரிய கிரிப்டோ சுரங்க நிறுவனங்களில் ஒன்றான லூபியனிடமிருந்து 1,27,272 பிட்காயின்கள் திருடப்பட்ட நிலையில், அந்த சைபர் ஹேக்கிங் நிகழ்வுக்கு அமெரிக்கா தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய மதிப்பில் இந்த பிட்காயின்களின் ஒட்டுமொத்த இந்திய மதிப்பு 116 லட்சம் கோடி ரூபாயாகும்.
CVERCஇன் அதிகாரப்பூர்வ வீசாட் கணக்கில் இது தொடர்பான புகார் வெளியிடப்பட்டது. அதில் இந்தச் சம்பவம் ஒரு சாதாரண சைபர் திருட்டுக் கும்பலின் வேலை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தையும் அவர்கள் விளக்கியுள்ளனர். அதாவது டிரம்ப் முதல்முறை அதிபராக இருந்தபோது அவரது பதவிக்காலம் முடிவடையச் சில காலம் இருந்தபோது இந்த சைபர் திருட்டு நடந்துள்ளது. இருப்பினும், அதன் பிறகு நான்கு ஆண்டுகளாக அந்த பிட்காயின் ஒரே வாலட்டில் வைக்கப்பட்டு இருந்ததை CVERC சுட்டிக்காட்டியது.
காரணம்
எப்போதும் பணம் பார்க்க விரும்பும் ஹேக்கர்கள் உடனடியாக ஹேக் செய்த பணத்தை விற்றுவிடுவார்கள். ஆனால், இந்தச் சம்பவத்தில் சுமார் 4 ஆண்டுகள் அந்த பிட்காயின் அதே வாலட்டில் இருந்துள்ளது. இதை வைத்துப் பார்த்தால் அது ஒரு ஹேக்கிங் அமைப்பால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒரு துல்லியமான நடவடிக்கை போலவே தெரிகிறது.
சீனா குற்றச்சாட்டு
மேலும், கடந்த அக்டோபர் மாதம் சென் ச்சி என்ற கோடீஸ்வரருக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கையையும் சீனாவின் CVERC சுட்டிக்காட்டுகிறது. சீனாவில் பிறந்த கம்போடிய கோடீஸ்வரரும், பிரின்ஸ் என்ற குழுமத்தின் தலைவருமான சென் ச்சி மீது அமெரிக்க நீதித்துறை பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அவர் பல்வேறு மோசடிகளிலும் ஈடுபட்டதாகச் சொல்லி வழக்குப்பதிவு செய்திருந்தது. மேலும், அவரிடம் இருந்து 127,271 பிட்காயின்களை பறிமுதல் செய்வதாகவும், இது எந்த நாட்டிலும் இல்லாத மிக பெரிய பறிமுதல் என்றும் அமெரிக்கா கூறியிருந்தது.
சரியாகச் சீனா கிரிப்டோ மையத்தில் இருந்து எவ்வளவு பிட்காயின் திருடப்பட்டதோ அதே அளவு பிட்காயின் 4 ஆண்டுகள் கழித்து பறிமுதல் எனச் சொல்லப்பட்டு இருப்பதாக சீனா கூறுகிறது. மேலும், இந்த பிட்காயின்களை எப்படி கைப்பற்றப்பட்டது என சென் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டபோதும் அது குறித்த தகவல்களை அமெரிக்கா நீதித்துறை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டது. இதையும் சீனா சுட்டிக்காட்டியிருக்கிறது.












Click it and Unblock the Notifications