5வது முறை வென்ற புதின்! வாழ்த்தோடு ரஷ்யாவுடன் நெருக்கத்தை அதிகரிக்கும் சீனா! இந்தியாவுக்கு சிக்கல்?
பெய்ஜிங்: ரஷ்யாவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 88% வாக்குகளை பெற்று அந்நாட்டின் அதிபராக 5வது முறையாக புதின் பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில், புதினுக்கு சீனா வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது.
ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். கடந்த 1991ம் ஆண்டு சோவியத் ரஷ்யா, வெறும் ரஷ்யாவாக உடைந்தது. இதனையடுத்து முன்னாள் சோவியத் நாடுகள் அமெரிக்க சார்பு நிலையை எடுத்திருக்கின்றன. அதேபோல, நேட்டோவிலும் உறுப்பினராகியுள்ளன. இது தற்போதைய ரஷ்யாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உக்ரைனின் நிலைப்பாடு போரை தூண்டியிருக்கிறது.

இந்நிலையில், அதிபர் புதின் பதவிக்காலம் முடிய இருந்ததால் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் மூன்று நாட்கள் வரை நீடித்தது. ரஷ்ய வரலாற்றில் மூன்று நாட்கள் வரை தேர்தல் நீடித்ததே கிடையாது. இருப்பினும் இந்த தேர்தல் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. இதில், புதின் சுயேட்சையாக போட்டியிட்டார். இவருக்கு எதிராக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயக கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை போட்டியிட்டன.
ஆனால், 88 சதவிகித வாக்ககுளை பெற்று புதின் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம், ரஷ்ய வரலாற்றில் 200 ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்டாலினுக்குப் பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி என்ற சாதனையை புதின் படைத்துள்ளார். இந்நிலையில் இவரது வெற்றிக்கு சீனா வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறிய வாழ்த்து செய்தியில், "இந்த வெற்றி இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவை மேலும் வலுப்படுத்தும். இனி வரும் காலங்களில் சீன-ரஷ்யாவின் உறவு நெருக்கமானதாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
அதிபர் தேர்தலில் மீண்டும் புதின் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், உக்ரைன் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வெற்றி, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்ய மக்கள் நியாயமானதாக ஏற்றுக்கொண்டனர் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். சீனா-ரஷ்யா உறவு தொடங்கி 75 ஆண்டுகள் ஆகின்றன. இதனை இரு நாடுகளும் கொண்டாடி வரும் நிலையில், சீன அரசின் கருத்துக்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல இனி வரும் நாட்களில் ஆசியாவிலும், இந்திய பெருங்கடல் பகுதியிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications