மாரடைப்பால் செத்து பிழைத்த நபர்.. "வேலைக்கு போகணும்.." எழுந்தவுடன் சொன்ன வார்த்தை இருக்கே.. முடியல!
பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு வேலைக்குச் செல்லும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை கஷ்டப்பட்டுப் போராடி மருத்துவர்கள் மீட்டனர். கிட்டதட்ட செத்துப் பிழைத்த அந்த நபர் மயக்கத்தில் இருந்து எழுந்தவுடன் சொன்ன வார்த்தை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
காலை 9 மணிக்குள் அடித்துப் பிடித்து வேலைக்குச் செல்வது எளிதான காரியம் எல்லாம் இல்லை. வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களை ரெடி செய்து பள்ளிக்கு அனுப்பி, நாமும் ரெடியாகி டிராபிக்கை தாண்டி ஆபீசுக்குள் நுழைவதற்குள் ஒருவழி ஆகிவிடுவோம்.

சீன நபருக்கு மாரடைப்பு:
இதன் காரணமாகவே காலை ஆபீசுக்கு செல்லும் வரை அனைவருக்கும் பிரஷர் உச்சத்தில் இருக்கும். மாரடைப்பு போன்றவை கூட இதுபோன்ற காலங்களில் தான் அதிகம் ஏற்படும். சீனாவில் அப்படி தான் அவசர அவசரமாக ஆபீஸ் கிளம்பிய நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அருகே இருந்தவர்கள் கஷ்டப்பட்டு அவரை காப்பாற்றிய நிலையில், எழுந்த பிறகு அவர் சொன்ன வார்த்தை தான் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சீனாவின் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 4ஆம் தேதி ஹுனான் மாகாணத்தின் சாங்ஷாவில் உள்ள ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், ரயிலில் ஏறுவதற்காக வரிசையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அவர் அப்படியே சரிந்து விழுந்தார்.
பதறிய மருத்துவர்கள்:
இதனால் அருகே உள்ளவர்கள் பதறியடித்து கொண்டு அவரை காப்பாற்றினர். ரயில் நிலைய ஊழியர்களும், மருத்துவர்களும் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சை அளித்தனர். சிபிஆர் உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்து, சுமார் 20 நிமிட தீவிர முயற்சிக்கு பிறகே அவரை மீட்டுள்ளனர்.
சொன்ன வார்த்தை இருக்கே:
மாரடைப்பால் கிட்டதட்ட செத்துப் பிழைத்த அந்த நபர் எழுந்தவுடன் சொன்ன வார்த்தை தான் அனைவரையும் மிரள வைத்திருக்கிறது. மயக்கத்தில் இருந்து எழுந்த அந்த நபர், "ஐயோ.. அந்த அதிவேக ரயிலை பிடித்துத்தான் நான் வேலைக்குச் செல்ல வேண்டும்" எனக் கூறியிருக்கிறார். மேலும், இது சாதாரண மயக்கம் தான் என்றும் மருத்துவமனைக்கு எல்லாம் போக மாட்டேன் எனக் கூறி அடம்பிடித்துள்ளார்.
இருப்பினும், சம்பவ இடத்தில் இருந்த ஒரு மருத்துவர் இதை அனுமதிக்கவில்லை. கீழே விழுந்ததில் மோசமான காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்பதால் மருத்துவமனைக்குச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். அந்த முதியவர் முதலில் அதை ஒப்புக்கொள்ளவில்லை என்ற போதிலும், பிறகு ஏதோ உடம்பில் பிரச்சினை என்பதை உணர்ந்து கொண்டு, ஆம்புலன்ஸில் ஏற ஒப்புக்கொண்டார்.
நெட்டிசன்கள்:
இந்த செய்தியை சவுத் சீனா மார்னிங் போஸ்ட் வெளியிட்ட நிலையில், அது டிரெண்டாகி வருகிறது. ஒரு சில நெட்டிசன்கள் பணம் முக்கியம் தான்.. ஆனால் இந்தளவுக்கு வேலை என இருக்கக்கூடாது எனக் கூறி வருகிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பினர் அவர் மட்டுமில்லை.. இங்கு பலரது நிலைமை இப்படி தான் இருக்கிறது. வேலைக்குச் செல்லவில்லை என்றால் வாழ்க்கை நடத்த முடியாத அளவுக்கு விலைவாசி உச்சத்தில் இருப்பதாகக் கூறி வருகிறார்கள்.
நிலைமை மோசம்:
கடந்த சில தலைமுறைகளாகவே வேகமாக வளர்ந்து வந்த சீன பொருளாதாரம் இப்போது சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அங்குப் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ள நிலையில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. அங்கு 16 முதல் 24 வயதானவர்களில் சுமார் 16 முதல் 17% மக்கள் வேலையில்லாமல் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications