மீண்டும் போர்? தைவான் மீது படையெடுக்கும் ஜின்பிங் அரசு? ஒரு நொடி யோசித்து சீன அமைச்சர் கொடுத்த பதில்
பெய்ஜிங்: சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே கடந்த சில காலமாகவே பதற்றமான சூழலே நிலவி வருகிறது. தைவான் மீது சீனா எப்போது வேண்டுமானாலும் போரை ஆரம்பிக்கும் என அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்கு சீனா முக்கியமான பதிலை கொடுத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே புவிசார் அரசியல் பதற்றங்கள் கிட்டதட்ட எல்லா பக்கமும் தொடர்கிறது. ஒரு பக்கம் மத்திய கிழக்கு மோதல், இன்னொரு பக்கம் ரஷ்யா உக்ரைன் மோதல்.. இதில் மத்திய கிழக்கில் இப்போதுதான் ஒருவழியாக அமைதி திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த சர்ச்சை ஓய்வதற்குள் இப்போது சீனா தைவான் மோதல் சூழல் ஏற்பட்டுள்ளது.

தைவான்
தைவான் தன்னை ஒரு சுதந்திர நாடு என்றே தொடர்ந்து கூறி வருகிறது. இருப்பினும், அதை திட்டவட்டமாக மறுக்கும் சீனா, அது தனது ஆளுகைக்கு உட்பட ஒரு பிரதேசம் என்றே தொடர்ந்து கூறி வருகிறது. மேலும், கடந்த 5 ஆண்டுகளாகவே தைவான் மீதான அழுத்தத்தையும் சீனா தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இந்தச் சூழலில் தைவான் மீது சீனா போர் தொடுக்குமா என்பதற்கு சீனா மிக முக்கியமான மற்றும் நேரடியாக பதிலை கொடுத்துள்ளது.
தைவான் தனக்கு சொந்தமானது என சீனா கூறினாலும் கூட தைவான் மக்கள் அதை ஏற்பதில்லை. தைவானில் தனியாக தேர்தல் நடத்தப்பட்டு அதன் அடிப்படையிலேயே அதிபர் தேர்வு செய்யப்படுகிறார். அதன்படி இப்போது அங்கு அதிபராக லாய் சிங்டே என்பவர் இருக்கிறார். ஆனால், தைவான் சுயாட்சி குறித்து பேசும் இந்த லாய் சிங்டேயை கண்டாலே சீனாவுக்கு பிடிக்காது. அவரை பிரிவினைவாதி என்றே சீனா தொடர்ந்து விமர்சிக்கும்..
தைவான் அதிபர்
கடந்த ஞாயிறு முதல் அதிபர் லாய் தைவானில் "நாட்டை ஒன்றிணைத்தல்" என்ற தலைப்பில் அவர் தொடர்ச்சியாக உரையாற்றி வருகிறார். அதில் தைவான் தனி நாடு என்றும், அதை உரிமை கோர சீனாவுக்கு எந்த சட்ட அல்லது வரலாற்று உரிமையும் இல்லை என்றும் அவர் கூறினார். லாயின் இந்த பேச்சுக்கு தான் சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சீனா மறுப்பு
தைவானின் ஆளும் கட்சி சுதந்திரத்தை நோக்கி செல்ல முயல்வதாகவும் இது மிகவும் ஆபத்தானது என்றும் சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யி சாடினார். ஜப்பான்தான் தைவானை திருடியதாக விமர்சித்த வாங் யி, 1943 கெய்ரோ பிரகடனத்தின்படி தைவானை சீனாவுக்கு திரும்ப அளிக்க ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.. இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் சரணடைவதற்கு முன்னதாகவே 1945 போஸ்டாம் பிரகடனத்தில் இது உறுதி செய்யப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீன அமைச்சர் திட்டவட்டம்
1895ல் ஜப்பான் தைவானை கைப்பற்றியது. சுமார் 50 ஆண்டுகள் நேரடியாக ஜப்பான் ஆளுகைக்கு கீழ் தான் தைவான் இருந்தது. இரண்டாம் உலக போர் சமயத்தில் தான் தைவானை விட்டு ஜப்பான் வெளியேறி இருந்தது. 2ம் உலக போரின் இந்த ஆவணத்தை குறிப்பிட்ட வாங் யி, "இதன் மூலம் ஒரு விஷயம் மிகவும் தெளிவாக உள்ளது. தைவான் சீனாவின் ஒரு பகுதி. தைவான் சீனாவுக்குத் திரும்பியது இரண்டாம் உலகப் போரில் கிடைத்த வெற்றிகளில் ஒன்றாகும்" என்று வாங் யி கூறினார்.
சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான பதட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துவிட்டன. சீனாவின் போர் பயிற்சிகள் தைவான் அருகே நடந்து வருகிறது. ஒரு நாள் தைவானை வலுக்கட்டாயமாக சீனா தன்னுடன் இணைக்கலாம்.. அப்போது அது பிராந்திய போரை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
தைவான் மீது போர்?
சீனா கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் அப்பகுதியில் போர் பயிற்சியை நடத்தியிருந்தது. சீனா தைவான் மீது தாக்குதல் நடத்த ஆயுத்தமாவதாகவும் அதையே இந்த போர் பயிற்சிகள் காட்டுவதாகவும் அமெரிக்கா சமீபத்தில் பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. இது குறித்து கேட்ட போது தைவான் விவகாரங்களுக்கான சீன செய்தித் தொடர்பாளர் ஜூ ஃபெங்லியன் முக்கியமான பதிலை அளித்தார்.
அதாவது அவர், "தைவான் ஏற்கனவே சீனாவின் ஒரு பகுதி தான்.. எனவே தைவான் மீது போரை ஆரம்பிக்க தேவை இல்லை" என்றார். ஏற்கனவே உலகெங்கும் பல்வேறு இடங்களிலும் புவிசார் அரசியல் பதற்றங்கள் நிலவி வரும் சூழலில் சீனாவின் இந்த பதில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications