சீனாவின் முதல் ஆளில்லா போர் விமான சோதனை ஓட்டம் வெற்றி
பெய்ஜிங்: சீனா தனது முதல் ஆளில்லா போர் விமானத்தை வெற்றிகரமாக சோதனை ஓட்டம் செய்து பார்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளில்லா போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது அந்நாடு தொடர்ந்து பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாதிகளை கொல்வதற்காக இத்தகைய ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தி வருகிறது.
சமீபகாலமாக நடத்தப்பட்ட அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் சிக்கி முக்கிய தீவிரவாதத் தலைவர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில், உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடும் வகையில் சீனாவும் தனது முதல் ஆளில்லா போர் விமானத்தை தயார் செய்துள்ளது.
கடந்த மாதம் நடந்த விமானக் கண்காட்சியில் சிறிய ரக ஆளில்லா விமானங்களை இயக்கிக் காட்டிய சீனா, நேற்று பிற்பகல் செங்டு நகரின் மேல் சர்வதேச வழித்தடத்தில் தனது முதல் ஆளில்லா விமானத்தை வானில் 20 நிமிடங்கள் பறக்க விட்டு சோதனை செய்து பார்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆன்லைனில் வெளியாகியுள்ள சீனாவின் ஆளில்லாத போர் விமானங்கள், அமெரிக்காவின் யுஎஸ் பி2 ஆளில்லா விமானத்தைவிட சிறியதாக தோற்றமளிக்கிறது. ஒரு ஜெட் என்ஜின் மூலம் இந்த விமானம் இயக்கப் படுகிறது.
சீனா-ஜப்பான் நாடுகளுக்கு இடையில் உள்ள தீவுக் கூட்டங்களுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடுவதால் போர் பதட்டம் உருவானது. கடந்த வாரம் கூட, சர்ச்சைக்குரிய கிழக்கு சீன கடல் தீவு பகுதியில் ஆளில்லா விமானம் பறந்து கண்காணித்ததாக ஜப்பான் தெரிவித்திருந்த நிலையில், சீனாவின் ஆளில்லா விமான சோதனை ஓட்டம் செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications