ஒரு குழந்தை திட்டம்! சட்டத்தை தளர்த்தும் சீனா!!

உலகிலேயே மக்கள் அதிகம் கொண்ட நாடு சீனா. இதனையடுத்து மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடந்த 1970ம் ஆண்டு முதல் ஒரு குழந்தை திட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்தது.
இதன்படி, ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். சீனாவின் இந்த முடிவு காரணமாக, தற்போது அந்நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.
அபராதம் வசூலித்த சீனா
கடந்த ஆண்டில் மட்டும் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொண்டவர்களிடம் இருந்து ரூ.16,740 கோடியை அபராதத் தொகையாக அரசு வசூலித்துள்ளது. மேலும் ஒரு குழந்தைக்கு மேல் மீண்டும் கர்ப்பமாக இருக்கும் பெண்களை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று கருக்கலைப்பு செய்வதாகவும், இரண்டாவது குழந்தையை அதிகாரிகளே எடுத்து சென்று அநாதை விடுதிகளில் சேர்த்து விடுகின்றனர் என்றும் புகார்கள் எழுந்தன.
அநாதை விடுதிகளில் சேர்க்கப்படும் குழந்தைகள், வெளிநாட்டு தம்பதிகளுக்கு பெரும் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சீனர்கள் புகார் தெரிவித்தனர். எனவே ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், சமீபத்தில் அதிபர் ஜி ஜிங்பிங் தலைமையில் கூடிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் இந்த திட்டத்தில் தளர்வுகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரு குழந்தை திட்டத்தின்படி பிறந்தவர்கள், தற்போது இரு குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications