விர்ஜின் கேலக்டிக், ப்ளூ ஆரிஜினுக்கு சவால் விடும் சீன நிறுவனம்.. விண்வெளி சுற்றுலா துறையில் போட்டி
பெய்ஜிங்: விண்வெளி துறை சமீப காலமாக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இந்நிலையில், விண்வெளி சுற்றுலாவை சீனா நிறுவனம் விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
மனிதனுக்கும் விண்வெளிக்குமான தொடர்பு என்பது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தொடங்கிவிட்டது. குரங்கிலிருந்து மனிதனாக நாம் பரிணமித்தபோது குகைகளில் வாழ்ந்து வந்தோம். அந்த குகைகள் இன்னமும் இருக்கின்றன. அதில் ஏராளமான ஓவியங்கள் வரைந்து வைத்திருக்கிறோம்.

இந்த ஓவியங்களில் ஆடு, மாடு ஆகியவற்றோடு சேர்த்து நட்சத்திரங்களையும், நிலவையும் கூட வரைந்து வைத்திருக்கிறோம். இப்படியாக விண்வெளி மீதான ஆர்வம் நாம் மனிதனாக மாற தொடங்கியபோதே நம்முடன் சேர்ந்து பிறந்துவிட்டது.
இப்படி இருக்கையில் கடந்த நூற்றாண்டில் உருவான அற்புதமான கண்டுபிடிப்புகள் நிலவை தொடும் அளவுக்கு மனித சமூகத்தை உயர்த்தி இருக்கிறது. மனிதர்கள் நிலவில் இறங்கி அங்கிருந்து மண்ணை பூமிக்கு கொண்டுவந்தனர். அதன் பின்னர் சூரிய குடும்பத்தில் உள்ள சில கோள்களில் விண்கலனை இறக்கி சாதனை படைத்துள்ளனர்.
இப்போது விண்வெளி துறையை மேலும் ஓரடி முன்னோக்கி நகர்த்தியிருக்கின்றனர். அதாவது இனி விண்வெளிக்கு யார் வேண்டுமானாலும் போகலாம் என்கிற நிலையை விண்வெளி சுற்றுலா மூலம் நாம் சாத்தியமாக்கியிருக்கிறோம்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதியன்று விர்ஜின் கேலக்டிக் எனும் விண்வெளி சுற்றுலா நிறுவனம், முதல் முறையாக 4 விஞ்ஞானிகள் உட்பட 6 பேரை விண்வெளிக்கு அழைத்து சென்று பத்திரமாக பூமிக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. 75 நிமிடங்கள் கொண்ட இந்த பயணத்தில் சுமார் 70 நிமிடங்கள் வரை விண்வெளியில் இந்த 6 பேரும் பறந்திருக்கிறார்கள்.
அதன் பின்னர் ப்ளூ ஆரிஜின் நிறுவனமும் சுற்றுலா பயணிகளை விண்வெளிக்கு அழைத்து சென்று பத்திரமாக திரும்பியிருக்கிறது. இதன் மூலம், பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் மட்டும்தான் விண்வெளிக்கு போக வேண்டும் என்று கிடையாது, யார் வேண்டுமானாலும் விண்வெளிக்கு சென்று திரும்பலாம் என்பதை இந்த இரண்டு நிறுவனங்களும் நிரூபணமாக்கியுள்ளன.
இந்த இரண்டு நிறுவனங்களும் அமெரிக்காவை சேர்ந்தவை. இந்நிலையில் தற்போது இந்தை துறையில் சீனாவும் நுழைந்திருக்கிறது. சீன வணிக விண்வெளி நிறுவனமான சிஏஎஸ் ஸ்பேஸ் தனது முதல் விண்வெளி சுற்றுலா வாகனத்தை 2027-2028ம் ஆண்டில் செலுத்தும் என்று தெரிவித்திருக்கிறது.
இந்த சுற்றுலா ராக்கெட்டில் 4 ஜன்னல்கள் கொண்ட அறை இருக்கும். இதில் 7 பேர் வரை பயணிக்க முடியும். ஒவ்வொரு 100 மணி நேரத்திற்கும் ஒரு ராக்கெட் சுற்றுலாவுக்கு என ஏவப்படும். மொத்தம் 10 ராக்கெட்கள் இருக்கின்றன. ஒரு பயணத்திற்கு ரூ.3.46 கோடி வரை செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது சீன அறிவியல் அகாடமியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications