மணப்பெண்களை "ஷாப்பிங்" செய்யும் சீன இளைஞர்கள்.. தலையே சுத்துது.. சீனாவில் இதெல்லாம் கூட நடக்குமா
பெய்ஜிங்: வங்கதேச பெண்களைச் சீன இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் சட்டவிரோத தரகர்கள் மூலமாகவே இதுபோன்ற திருமணங்கள் நடைபெறுகிறது. இதை மணப்பெண் ஷாப்பிங் எனக் குறிப்பிட்டுள்ள சீன தூதரகம், இதுபோன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகச் சீனா இருக்கிறது. இருந்தாலும் சில காரணங்களால் சீன இளைஞர்களுக்குத் திருமணம் நடப்பதில் சிக்கல் இருக்கிறது. இதற்கிடையே திருமணம் தொடர்பாக வங்கதேசத்தில் உள்ள சீன தூதரகம் இப்போது மிக முக்கியமான ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

மணப்பெண் பஞ்சம்
அதாவது சீனாவில் இப்போது மணப்பெண்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கதேசத்தைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்து, அவர்களைச் சட்டவிரோதமாகச் சீனாவில் அழைத்து வந்துவிடுகிறார்கள். இதை வைத்து அங்கு மிகப் பெரிய மோசடிகளும் நடக்க ஆரம்பித்துவிட்டது. அதாவது சீன இளைஞர்களிடம் அழகான பெண்களின் போட்டோக்களை காட்டி, இவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறோம் எனச் சொல்லி பணத்தைப் பறிக்கும் கும்பல் மோசடி செய்து வருகிறதாம்.
மோசடி திருமணம்
இதன் காரணமாகவே சட்டவிரோத எல்லை தாண்டிய திருமண ஏற்பாடுகளைத் தவிர்க்கவும், ஆன்லைன் திருமணத் திட்டங்களில் எச்சரிக்கையாக இருக்கவும் தனது குடிமக்களைச் சீனா வலியுறுத்தியது. எல்லை தாண்டிய டேட்டிங் என்று விளம்பரப்படுத்தி சிலர் வலைவிரிப்பதாகவும் அதில் ஏமாற வேண்டாம் என்றும் கூறியுள்ளது. இதுபோல "வெளிநாட்டு மனைவிகள்" என்பதைப் பார்த்து ஏமாற வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு மனைவியை வாங்குவது எனச் சிலர் விளம்பரப்படுத்தும் நிலையில், அதை நிராகரிக்கவும், வங்கதேச பெண்களைத் திருமணம் செய்வதற்கு முன் ஒரு முறைக்குப் பல முறை கவனமாகச் சிந்திக்கவும் வலியுறுத்தியது.
பின்னணி என்ன
சீனாவில் இதற்கு முன்பு பல ஆண்டுகள் ஒரு குழந்தை கொள்கை இருந்தது. அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெறுவோருக்கு அரசு வேலை உட்பட பல சலுகைகள் மறுக்கப்படும். இதனால் அந்த காலகட்டத்தில் மக்கள் பலரும் ஆண் குழந்தைகளையே பெற விரும்பினர். இதனால் சீனாவில் பாலின ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது.
இதனால் இப்போது சீனாவில் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். இதன் காரணமாகவே வெளிநாட்டுப் பெண்களுக்குத் தேவை அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் சில கிரிமினல் கும்பல்கள் வங்கதேசத்தில் பெண்களைக் கடத்தி சீன இளைஞர்களுக்குத் திருமணத்திற்கு விற்றுவிடுகிறார்களாம். சட்டவிரோதமாக நடக்கும் இந்த திருமணங்களைத் தான் சீன தூதரகம் எச்சரித்துள்ளது, மேலும் இதனால் கடுமையான சட்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் வார்ன் செய்துள்ளது.
சீனா எச்சரிக்கை
சீனாவுக்கு வெளியே உள்ளவர்களைத் திருமணம் செய்ய உதவும் நிறுவனங்கள் தரகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சீனா ஏற்கனவே எச்சரித்துள்ளது. மேலும், இதுபோன்ற மோசடிகளைச் செய்வதாக விளம்பரப்படுத்துவோர் குறித்து தகவல் தெரிய வந்தால் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வங்கதேசத்தில் சட்ட நடைமுறைகள் என்பது மிக மெதுவாக இருக்கும் என்றும் இதனால் பெண்களைக் கடத்தும் விவகாரத்தில் சீன நாட்டினர் சிக்கினால் பல ஆண்டுகள் வங்கதேச சிறைகளில் இருக்கும் சூழல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications