அப்பா ஹாஸ்டலில் சாப்பாடு சரியில்லை.. மகள் சொன்னதுமே பணியை ராஜினாமா செய்து ஹோட்டல் தொடங்கிய தந்தை
பெய்ஜிங்: தாய் இல்லாத மகளை செல்லமாக வளர்த்த தந்தை அவரை பல்கலைக்கழகத்தில் படிக்க வைத்தார். பல்கலைக்கழக விடுதியில் உணவு சுவையாக இல்லாமல் இருந்துள்ளது. இதனால் மாணவி தினமும் புலம்பிய நிலையில் பாசக்கார தந்தை தனது பணியை ராஜினாமா செய்து 900 கிலோமீட்டர் தூரம் பயணித்து பல்கலைக்கழகத்தின் அருகேயே புதிதாக ஹோட்டல் திறந்து இருப்பது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களின் குழந்தைகள் மீது அளவுக்கடந்த பாசம் இருக்கும். குழந்தைகளிடம் பெரும்பாலான பெற்றோர் பாகுபாடு காட்டுவது இல்லை. இருப்பினும் கூட பெரும்பாலான மகன்கள் தங்களின் அப்பாவை ஒப்பிடும்போதும் அம்மா மீதும் அதிக பாசம் வைத்திருப்பார்கள்.

அதேபோல் பெரும்பாலான மகள்களுக்கு அம்மாவை விட அப்பாக்களின் மீது அதிக அன்பு இருக்கும். இதனை பலரும் வெளிப்படையாக கூறி உள்ளனர். நாமும் நம் வீடுகளில் நேரடியாக பார்த்து இருப்போம்.
இதற்கிடையே தான் தற்போது சீனாவில் தாயை இழந்த மகள் மீது கொண்ட அதீத அன்பு காரணமாக தந்தை செய்த செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்று வருகிறது. அதுபற்றி இங்கு பார்க்கலாம்.
சீனாவின் ஜிலின் மாகாணத்தின் சிப்பிங்கில் உள்ள ஜிலின் நார்மல் பல்கலைக்கழகத்தில் படித்து வருபவர் லி பிங்டி. இவர் தற்போது 2ம் ஆண்டு படிப்பை படித்து வருகிறார். விடுதியில் தங்கி அவர் படிப்பை தொடர்ந்து வருகிறார். லி பிங்டிக்கு விடுதியில் வழங்கும் உணவு சுவையானதாக இல்லை.இதனால் வீட்டில் சாப்பிட்டது போல் அவர் உணரவில்லை.
லி பிங்டியின் தாய் லுகோமியா ரத்த புற்றுநோயால் இறந்துவிட்டார். இதனால் அவரை தந்தை தான் செல்லமாக வளர்த்தார். விடுதியில் உணவு சரியில்லை என்று லி பிங்டி தனது தந்தையிடம் அடிக்கடி கூறி வந்தார். சமீபத்திலும் அவர் மீண்டும் விடுதி சாப்பாடு சரியில்லை எனக்கூறி புலம்பினார். அதனை கேட்ட மாணவியின் தந்தை மனம் உடைந்து போனார்.
செல்லமாக வளர்த்த மகள் விடுதியில் கஷ்டப்படுகிறாளே..
தனது மகளுக்கு நல்ல உணவு கிடைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். இதனால் மகள் லி பிங்டி படிக்கும் பல்கலைக்கழகத்தின் அருகே ஹோட்டல் திறக்க முடிவு செய்தார். அவர் தியான்ஜினில் உள்ள பார்பிக்யூ ரெஸ்டாரண்ட்டில் பணியாற்றி வந்தார். மகள் லி பிங்டிக்காக அவர் அந்த பணியை ராஜினாமா செய்தார்.
அதன்பிறகு 900 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது மகள் லி பிங்டி படிக்கும் பல்கலைகழகத்தின் அருகே புதிதாக ஹோட்டலை திறந்தார். கடந்த மாதம் வாடகைக்கு அறை எடுத்து ஹோட்டல் திறக்கப்பட்டது. ஃபிரைட் ரைஸ், லூடில்ஸ் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பார்த்து மகள் லி பிங்டி கண்கலங்கினார். அதேவேளையில் அவர் தனது தந்தை ஹோட்டலில் வந்து சாப்பிட தொடங்கினார். இதன்மூலம் லி பிங்டியும், அவரது தந்தையும் ஹேப்பியாகினர்.
அதுமட்டுமின்றி தனக்காக புதிய ஹோட்டலை திறந்த தந்தைக்கும் மகள் லி பிங்டி உதவி செய்ய தொடங்கினார். ஆனால் முதலில் விற்பனை சரியாக இல்லை. பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. மக்கள் அதிகமாக அவரது கடைக்கு வராதது தான் இதற்கு காரணம். இன்னும் சொல்லப்போனால் முதல் நாளில் வெறும் 7 பேர் மட்டுமே சாப்பிட்டனர்.
லி பிங்டி படித்து கொண்டே தனியாக டியூசன் எடுக்கிறார். அதன் மூலமாக அவர் 70 சீன யுவான் சம்பாதிக்கிறார். இதனை வைத்து அவர்கள் சமாளித்த நிலையில் தனது தந்தை லாபமின்றி கஷ்டப்படுவதை பார்த்து லி பிங்டி மனம் நொந்தார். இதையடுத்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது தந்தை தனக்காக செய்த வேலையை விட்டு 900 கிலோமீட்டர் பயணித்து புதிதாக ஹோட்டல் திறந்து இருப்பதையும், அதில் வியாபாரம் இல்லாதது பற்றியும் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி வியாபாரத்தை அதிகரிக்க அறிவுரை தாருங்கள் என்று போஸ்ட்டில் தெரிவித்து இருந்தார்.
அதனை பார்த்த பலரும் லி பிங்டியின் தந்தையை பாராட்ட தொடங்கினர். மகளுக்காக ஹோட்டல் திறந்ததால் பலரும் நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ-மாணவிகள், பாடம் எடுக்கும் பேராசிரியர்கள் என பலரும் அந்த போஸ்ட் பற்றி அறிந்து லி பிங்டியின் தந்தையின் கடைக்கு படையெடுக்க தொடங்கினர். இப்போது அந்த ஹோட்டலில் விற்பனை அதிகரித்துள்ளது. எப்போதும் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதுபற்றி லி பிங்டி கூறுகையில்,‛‛எனது தாய் ரத்த புற்றுநோயால் காலமான பிறகு எனக்கும், தந்தைக்கும் இடையேயான அன்பு அதிகரித்தது. நாங்கள் 2 பேரும் அதிக அன்புடன் இருந்தோம். பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பதால் அவரை பிரியும் சூழல் வந்தது. இதனால் குழப்பம் அடைந்தேன். அப்போது அவர் என்னிடம் சொன்னது ஒன்றை ஒன்றை தான். எங்கு வேண்டுமானாலும் சென்று படி. நான் உன் கூடவே இருப்பேன் என்றார். இப்போது அவர் சொன்னது போல் நிரூபித்து காட்டிவிட்டார். எங்களுக்கு அதிகப்படியான லாபம் எதுவும் வேண்டாம். நானும், தந்தையும் ஒன்றாக இருந்தாலே போதும்'' என்றார்.இந்த சம்பவம் சீனாவில் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications