பற்றி எரியும் சூடான்.. எங்கும் வெடிகுண்டு சத்தம்! ராணுவத்திற்குள் வெடித்த மோதல்! என்னதான் பிரச்சனை?
கார்ட்டூம்: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் அந்நாட்டு ராணுவத்தினருக்கும் துணை ராணுவ படைக்கும் இடையே மோதல் வெடித்து நாட்டின் முக்கிய பகுதிகளில் வன்முறை காடாக மாறி இருக்கிறது. துணை ராணுவப் படை தனது ஆதரவுப் படைகளுடன் முன்னேறி சென்று அந்நாட்டு சர்வதேச விமான நிலையத்தையும் ராணுவ தளம் ஒன்றையும் கைப்பற்றி உள்ளது.
வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் தலைநகர் கார்ட்டூம் பகுதியில் அந்நாட்டின் ராணுவத்தினருக்கும் துணை ராணுவ படையினருக்கும் இடையே மோதல் வெடித்து இருக்கிறது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் குண்டுவீச்சு தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தெற்கு கார்ட்டூம் பகுதியில் ஏற்பட்டு இருக்கும் அதிக அளவிலான தூப்பாக்கிச்சூடு சத்தங்கள் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களால் பதற்றமான நிலை நீடித்து வருகிறது. இதேபோல் சூடானில் அமைந்து இருக்கும் அந்நாட்டின் ராணுவ தலைமையகம் மற்றும் மத்திய கார்ட்டூம் பகுதியில் இருக்கும் பாதுகாப்பு அமைச்சகம் அருகேயும் துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள் நடந்து இருக்கின்றன.
சூடான் நாட்டின் சக்தி வாய்ந்த துணை ராணுவப் படையாக ஆர்.எஸ்.எப் உள்ளது. இதன் செயல்பாடுகள் கடந்த சில நாட்களாக தன்னிச்சையாக உள்ளது எனவும், அந்நாட்டு அரசு மற்றும் ராணுவத்துக்கு கட்டுப்படாமல் துணை ராணுவ படைசெயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இத்தகைய செயல்பாடுகள் சட்டத்துக்கு புறம்பானவை என்று சூடான் நாட்டு ராணுவம் துணை ராணுவ படையை கண்டித்தது.
இதன் காரணமாக சூடான் நாட்டின் ராணுவத்திற்கும் ஆர்.எஸ்.எப் துணை ராணுவ படைக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு எதிர் தாக்குதல் நடத்தும் அளவுக்கு மோதல் பெரிதானது. குறிப்பாக கடந்த 13 ஆம் தேதி இந்த மோதல் பூதாகரமாக வெடிக்கவே இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் சரமாரி தாக்குதல்களில் ஈடுபடத் தொடங்கினர்.
தலைநகர் கார்ட்டூம், அரசு அலுவலகங்கள், விமான நிலையங்கள், பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் தாக்குதல்கள் தொடர்ந்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆர்.எஸ்.எப் துணை ராணுவப் படைக்கு ஆதரவாக மேலும் சில படைகளும் ராணுவத்தின் மீது தாக்குதல்களை நடத்த தொடங்கி உள்ளதால் மோதல் மேலும் உச்ச நிலையை அடைந்து இருக்கிறது.

சூடான் தலைநகர் கார்ட்டூமில் உள்ள அதிபர் மாளிகை, சர்வதேச விமான நிலையத்தை ஆர்.எஸ்.எப் துணை ராணுவமும் அதன் ஆதரவு படைகளும் சுற்றி வளைத்தன. அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து ஆர்.எஸ்.எப் துணை ராணுவம் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில், "எங்களால் விமான நிலையத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிந்தது.
அதேபோல் சூடானின் வடக்கு பகுதியில் அமைந்து இருக்கும் மெரோவே எனப்படும் ராணுவ தளத்தையும் நாங்கள் கைப்பற்றி உள்ளோம்." என்று குறிப்பிட்டு உள்ளது. இதற்கு முன்னதாக ஆர்.எஸ்.எப் துணை ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் சூடான் ராணுவம் தங்களை சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம்சாட்டி இருந்தது. நாட்டை காக்க வேண்டிய ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு மத்தியிலேயே வெடித்து உள்ள மோதலால் மக்கள் பீதியடைந்து உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications