என்றென்றும் அண்ணா.. ஸ்பெயின் நாட்டில் அண்ணா படத்துக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!
மேட்ரிட்: ஸ்பெயின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், அண்ணா நினைவுநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான சி.என்.அண்ணாதுரையின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. நவீன தமிழ்நாட்டின் சிற்பி என்றழைக்கப்படும் பேரறிஞர் அண்ணா, அவர் மறைந்து அரை நூற்றாண்டு காலம் கடந்த பின்னும், இன்றைய அரசியலின் முகமாக இருந்து வருகிறார்.

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தன்று ஆண்டு தோறும் சென்னையில் திமுக அமைதி பேரணியை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டும் அண்ணாவின் 55வது நினைவு தினமான இன்று திமுக சார்பில் அமைதிப் பேரணி, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக - அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை #அண்ணா அவர்களின் நினைவுநாள்!
— M.K.Stalin (@mkstalin) February 3, 2024
இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் #Anna சொன்ன கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும்… pic.twitter.com/QPU2So44fC
தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எம்எல்ஏக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், சென்னை அண்ணா சாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலையிலிருந்து மெரினா கடற்கரை அருகே அண்ணா நினைவிடத்திற்கு அமைதி ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேசமயம், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ள நிலையில், அங்கு அண்ணாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக - அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவுநாள்! இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்! எண்ணித் துணிக கருமம்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications