வக்கீல்கள் சரியில்லை, என்னை உடனே கொன்றுவிடுங்கள்: யு.எஸ். கோர்ட்டில் ஆந்திரா கொலை குற்றவாளி கெஞ்சல்
பெனிசில்வேனியா: அமெரிக்காவில் 10 மாத குழந்தை மற்றும் அவரின் பாட்டியை கொலை செய்த ஆந்திராவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் தனக்கு உடனே மரண தண்டனையை நிறைவேற்றுமாறு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்தவர் ரகுநந்தன் யந்தமுரி(29). அவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். கலிபோர்னியாவில் வசித்து வந்த அவர் 2012ம் ஆண்டு பெனிசில்வேனியா மாநிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் அப்பர் மெரியன் டவுன்ஷிப் என்ற பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு எடுத்து தங்கினார். அப்போது அதே குடியிருப்பில் தங்கியிருந்த வெங்கட வென்னா(41), சென்சு லதா புனுரு என்ற தெலுங்கு குடும்பத்துடன் ரகுவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
வெங்கட வென்னாவும் அவரது மனைவியும் வேலை பார்த்ததால் அவர்களின் 10 மாத குழந்தையான சான்வி வென்னாவை அவரது பாட்டி சத்யாவதி வென்னா(61) கவனித்துக் கொண்டார். இந்நிலையில் ரூ. 31 லட்சம் கேட்டு குழந்தையை கடத்த வென்னாவின் வீட்டுக்கு கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரகு சென்றார்.
அப்போது பாட்டி சத்யாவதி குழந்தையை கடத்தவிடாமல் தடுக்க ரகு அவரை கொலை செய்தார். பின்னர் குழந்தை அழுவது யாருக்கும் கேட்காமல் இருக்க அதன் வாயில் துணியை திணித்து ஒரு பெட்டிக்குள் வைத்தார். மேலும் வீட்டில் இருந்த நகைகளையும் அந்த பெட்டிக்குள் வைத்து எடுத்துச் சென்றார். குழந்தையை கொலை செய்த அவர் அதன் உடலை குடியிருப்பின் ஜிம்மில் உள்ள ஆண்கள் லாக்கரில் போட்டுவிட்டார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரகு வென்னாவுக்கு பணம் கேட்டு எழுதிய கடிதத்தை வைத்து அவரை கைது செய்தனர். கடிதத்தில் அவர் வெங்கட வென்னாவை சிவா என்றும் அவரது மனைவியை லதா என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர்களை சிவா, லதா என்று அவர்களுக்கு நன்கு தெரிந்து வெகுசிலரே அழைப்பதால் ரகு சிக்கினார்.
இந்த வழக்கில் ரகுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார். ஹென்றி ஹில்ஸ் மற்றும் ஸ்டீபன் ஹெக்மான் ஆகியோர் ரகு சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வருகிறார். ஆனால் அவர்கள் ஒழுங்காக வாதாடுவது இல்லை என்று கூறி பலநேரம் ரகுவே வாதாடுகிறார்.
இந்நிலையில் தனது வழக்கறிஞர்கள் வாதாடுவதை பார்த்தால் கடுப்பாக இருப்பதால் தனக்கு உடனே மரண தண்டனையை நிறைவேற்றுமாறு ரகு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ரகுவின் கூற்று வெறும் நாடகம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். ரகு முன்பும் கூட நீதிமன்றத்தில் இதையே தான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications