சீக்கிய தலைவர் கொலை வழக்கில் இந்தியாவை குற்றம்சாட்டும் கனடா! ஆதாரங்களை வெளியிட வலுக்கும் கோரிக்கைகள்
ஓட்டவா: கனடாவில் சீக்கிய தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக விமர்சித்துள்ள நிலையில் இது தொடர்பான ஆதாரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் 8ம் தேதியன்று கனடாவில் சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இவர் மீது இந்தியாவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவர் காலிஸ்தான் விடுதலைக்கு செயல்பட்டதாகவும், காலிஸ்தான் புலிகள் படைக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி வழங்கியதாகவும் இந்திய உளவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இது தவிர கடந்த 2007ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடந்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் நிஜ்ஜார் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார். இப்படியாக ஏராளமான வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருந்தது. இவர் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகயாகவும் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பஞ்சாப் காவல்துறை கனடாவுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால் கனடா அதை ஏற்க மறுத்துவிட்டது. இந்த சூழலில்தான் அவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து விசாரணையில் இறங்கிய கனடா உளவுத்துறை இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது இந்தியா என்று குற்றம்சாட்டியுள்ளது. இதனை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக கூறி விமர்சித்துள்ளார். இந்த கொலைக்கு பின்னால் இந்தியாவின் நடவடிக்கைகள் இருப்பதற்கான உறுதியான காரணங்கள் இருக்கின்றன என்றும், இது தொடர்பாக இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஜி20 மாநாட்டில் இந்தியாவுக்கு வந்த ஜஸ்டின் ட்ரூடோ, இந்த கொலைக்கான ஆதாரங்களை பிரதமரிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து இந்திய தூதரக அதிகாரி ஒருவர் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்திருக்கிறது. கனடாவில் எந்த வன்முறை சம்பவத்திலும் நாங்கள் ஈடுபடவில்லை என்று இந்தியா கூறியுள்ளது. நிலைமை இவ்வாறு இருக்கையில் கனடா தான் வைத்திருக்கும் ஆதாரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று பலரும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
கனடாவின் பிரதமர் கூறியிருப்பதால் இதற்கான ஆதாரங்களை பொது வெளியில் வெளியிடவேண்டும். அதைப்போலவே இந்தியப் பிரதமரிடம் கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களையும் அவர் பொதுவெளியில் வைக்கவேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. மறுபுறம் இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியது ஜஸ்டின் ட்ரூடோவின் முட்டாள்தனமான செயல் என்று கனடாவின் பத்திரிகையாளர் டேனியர் போர்ட்மேன் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications