இந்தியாவின் மூச்சை நிறுத்திடுவோம்னு.. மிரட்டிய பாகிஸ்தான் தளபதியின் தந்தையே ஒரு சர்வதேச தீவிரவாதியாம்!
இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதலை தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இதற்கிடையே தண்ணீரைத் தரவில்லை என்றால் மூச்சை நிறுத்திவிடுவோம் என பாக். லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி மிரட்டும் வகையில் பேசியிருந்தார்.. இதற்கிடையே இந்த அகமது ஷெரீப் சவுத்ரி யார்.. அவரது பின்னணி என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்திருந்தது. அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. இந்தியாவின் தாக்குதலைப் பார்த்துப் பயந்த பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வர அழைப்பு விடுத்தது. இந்தியாவும் அதை ஏற்கவே மோதல் முடிவுக்கு வந்தது.

பாகிஸ்தான்
மோதலில் மண்ணை கவ்வினாலும் கூட ஏதோ போரில் வென்றது போலப் பாகிஸ்தான் தனக்கு தானே பில்டப் கொடுத்து வருகிறது. மேலும், இந்தியா குறித்தும் தொடர்ந்து அத்துமீறிப் பேசி வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் மீண்டும் திமிராகப் பேசி இந்தியாவை அச்சுறுத்த முயன்றுள்ளார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது. நீண்ட கால நோக்கில் இது பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய அடியாகவே இருக்கும். இதற்கிடையே சிந்து நதி நீரைத் தரவில்லை என்றால் இந்தியாவின் மூச்சை நிறுத்துவோம் என்பது போல லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி கூறியிருந்தார். பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, "எங்கள் தண்ணீரை நீங்கள் தடுத்தால், நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்துவோம்" என அத்துமீறிப் பேசியிருந்தார்.
ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி
அவரது பேச்சு இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், பலரும் அவரது பேச்சு லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத்தின் பேச்சை ஒத்து இருப்பதாகவும் பலரும் சாடி வருகிறார்கள். லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் சமீபத்தில், "நீங்கள் தண்ணீரை நிறுத்தினால்.. நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்துவோம்.. பின்னர் இந்த ஆறுகளில் ரத்தம் வரும்" என்று கூறியிருந்தார்.. இப்போது அந்த பயங்கரவாதியின் கருத்தைப் போலவே ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரியும் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அவரது பேச்சு மட்டும் தீவிரவாதியின் பேச்சைப் போல இல்லை.. அவரது குடும்பத்தினருக்குமே கூட தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அவரது தந்தை சுல்தான் பஷிருதீன் மஹ்மூத்தின் மகன் ஆவார். அணு ஆயுத விஞ்ஞானியான சுல்தான் பஷிருதீன் மஹ்மூத் தீவிரவாதிகளுக்கு அணு ஆயுதத்தைச் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுக்க முயன்றார். இதைத் தெரிந்துதான் கடந்த 2001ம் ஆண்டு அவரை அமெரிக்க எஃப்.பி.ஐ கைதும் செய்திருந்தது.
ஒசாமா பின்லேடன் உடன் நட்பு
அப்போதுதான் அணு ஆயுதங்கள் தொடர்பாக அவர் ஒசாமா பின்லேடனை சந்தித்த ஒப்புக்கொண்டார். கடந்த 2001 டிசம்பர் மாதம் அவரை சர்வதேச பயங்கரவாதியாகவும் அமெரிக்கா அறிவித்திருந்தது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை. ஒசாமா பின்லேடன், அல்-கொய்தா மற்றும் தாலிபான் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டதாகவும் தீவிரவாத தாக்குதல்களுக்குத் திட்டமிட்டுத் தருவது, நிதியளிப்பதையும் செய்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆயுதங்கள் வெடிமருந்துகளை வழங்குவது, தீவிரவாதத்தை ஆதரிப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் அவர் மீது இருந்தது. மேற்குலக நாடுகள் மட்டுமின்றி, அவருடன் இணைந்து வேலை செய்த அதிகாரிகளும் கூட அவரது மத தீவிரத்தைக் கண்டு பயந்துபோனதாக 2009ல் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது..
சிந்து நதி நீர் ஒப்பந்தம்
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் ஆதரவு அளித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அப்போதே பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாகத் தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இதுபோன்ற ஒரு அறிவிப்பைப் பாகிஸ்தான் துளியும் எதிர்பார்க்கவில்லை.
சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகள், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குப் பாயும் நிலையில், அதை நிர்வகிப்பதே சிந்து நதி நீர் ஒப்பந்தம். 1960ல் போடப்பட்ட இந்த ஒப்பந்தம் உலக வங்கி முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. பாகிஸ்தானுக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இதுவே பூர்த்தி செய்கிறது. தற்போதைய சூழலில் நீரைத் தடுக்க தேவையான அணைகள் நம்மிடம் இல்லை என்ற போதிலும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் அங்கு புதிய அணைகளைக் கட்டும் பணிகளை இந்தியாவில் விரைந்து மேற்கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications