திடீரென பற்றி எரிந்த செர்னோபில் அணுமின் நிலையம்! பயங்கர ட்ரோன் தாக்குதல்! கதிர்வீச்சு ஆபத்து இருக்கா
கீவ்: கடந்த 1986ஆம் ஆண்டு செர்னோபில் அணுமின் நிலையத்தில் மிக மோசமான விபத்து ஏற்பட்டது அனைவருக்கும் தெரியும். உலகளவில் ஏற்பட்ட மிக மோசமான அணுமின் நிலைய விபத்துகளில் அதுவும் ஒன்றாகும். இதற்கிடையே செர்னோபில் அணுமின் நிலையத்தின் மீது இப்போது திடீரென ட்ரோன் ஒன்று விழுந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு தீ விபத்தும் ஏற்பட்டுள்ள நிலையில், இது பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2022ம் ஆண்டு முதல் போர் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் தாக்குதல் நடத்திய நிலையில், அதன் பிறகு போர் தொடர்ந்து வருகிறது.

செர்னோபில் அணுமின் நிலையத்தின் மீது விழுந்த டிரோன்
இதற்கிடையே உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தின் மீது டிரோன் ஒன்று விழுந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 14ம் தேதி நடந்ததாகச் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது.. மேலும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் இந்த தாக்குதலை உறுதி செய்துள்ளார். அதிக வெடி பொருட்களுடன் பறந்து வந்த ட்ரோன், செர்னோபில் அணுமின் நிலையத்தின் மீது விழுந்துள்ளது. இந்த ட்ரோனை ரஷ்யா தான் அனுப்பியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. இருப்பினும், ரஷ்யா தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
கதிர்வீச்சில் இருந்து உலகைப் பாதுகாக்கும் அணுமின் நிலையத்தின் சுவர்களை ட்ரோன் தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலைத் தீவிரவாத செயல் என்று கண்டித்த ஜெலன்ஸ்கி, அணு ஆயுத தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டால் அது மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்தார்.
அடுத்து என்ன நடந்தது
இந்த தாக்குதல் குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். கதிர் வீச்சைத் தடுக்கும் சுவர்களில் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிவேகமாக வந்த ட்ரோன், அணுமின் நிலையத்தைத் தாக்கியதும் வெடித்துச் சிதறும் காட்சிகள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அதேநேரம் இந்த தாக்குதலால் கதிர்வீச்சு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பிறகும் கூட அணுமின் நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கதிர்வீச்சு அளவுகள் இயல்பானதாகவும் நிலையானதாகவும் இருப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், இந்தத் தாக்குதலில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
ரஷ்யா உக்ரைன் போர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இன்னுமே கூட முடிவுக்கு வரவில்லை. உக்ரைனில் தாக்குதல்கள் தொடரும் நிலையில், இது அங்குள்ள அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து கவலையை எழுப்புகிறது. அதேநேரம் அணுமின் நிலையம் தற்போது பாதுகாப்பாகவே இருப்பதாகத் தெரிவித்த சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி, வரும் காலத்தில் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
செர்னோபில் அணுமின் நிலையத்தில் உள்ள 4வது உலை கடந்த 1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி வெடித்ததில் மிக மோசமான அணுசக்தி பேரழிவு ஏற்பட்டது. அப்போது கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தவும் ஆபத்தைக் குறைக்கவும், கான்கிரீட் மற்றும் எஃகு மூலம் வலுவான சுவர் ஒன்று கட்டப்பட்டது. இருப்பினும், காலம் செல்ல செல்ல அது சேதம் அடைந்த நிலையில், 2016ல் புதிதாக ஒரு எஃகு வளைவு ஏற்படுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications