எகிப்து முன்னாள் அதிபர் மோர்சிக்கு ஆயுள், மரண தண்டனை உறுதி!
கெய்ரோ : எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சி மீது 2011-ம் ஆண்டு சிறைக்கைதிகள் தப்பிச் செல்வதற்கு உதவியாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனை அந்நாட்டின் தலைமை முப்தியின் அனுமதியுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் முகமது மோர்சி. முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012 ஆம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கிவிட்டு அதிபர் பதவியைக் கைப்பற்றிய மோர்சியால் ஓராண்டுக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்க முடியவில்லை.

எகிப்தின் ராணுவத் தலைவராக இருந்த அப்டெல் சிசி, மோர்சியை பதவியிலிருந்து இறக்கி கைது செய்து சிறையிலும் அடைத்தார். அவர்மீது பல வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
அவருக்குத் துணை புரிந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கட்டுள்ளனர்.
இவர்களில் சுமார் 100 பேருக்கு ஏற்கனவே தனித்தனியாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மோர்சிக்கும் கடந்த மே மாதம் 16-ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, எகிப்து நாட்டின் சட்டத்தின்படி, அரசாணைகளை வெளியிடும் தலைமை முப்திக்கு இந்த தண்டனை விவரம் அனுப்பப்பட்டது.
இந்த தண்டனை தொடர்பாக தலைமை முப்தி ஆய்வு செய்து, கருத்து தெரிவித்த பின்னர் ஜூன் 2-ம் தேதி கெய்ரோ நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை அறிவிக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, மோர்சியின் மரண தண்டனை ரத்து செய்யப்படும் என அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், தலைமை முப்தியின் பரிந்துரை கடந்த 2-ம் தேதிதான் நீதிபதியிடம் வந்து சேர்ந்தது. இதையடுத்து, அந்த பரிந்துரையையும், முப்தியின் கருத்தையும் பரிசீலித்து முடிவெடுக்க அவகாசம் தேவைப்படுவதால் இறுதி தீர்ப்பு ஜூன் 16-ம் தேதி (நேற்று) அறிவிக்கப்படும் என நீதிபதி ஷபான் எல் ஷமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று அளிக்கப்பட்ட இறுதி தீர்ப்பின்போது, ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை தலைமை முப்தி ஏற்றுக் கொண்டுள்ளதால் அவரது மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டதாக நீதிபதி அறிவித்தார்.
இதுதவிர, பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் பிரிவினர் மற்றும் லெபனான் நாட்டை சேர்ந்த தீவிரவாத இயக்கங்களுடன் இணைந்து எகிப்து அரசை கவிழ்க்க சதி செய்ததாக மோர்சி மீது தொடரப்பட்டிருந்த மற்றொரு வழக்கிலும் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. மோர்சி மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த 15 தலைவர்களுக்கு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை ஆகியவற்றை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் அனுமதியும் மோர்சிக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications