படுத்தி எடுத்த வெப்பம்! ஆஸ்திரேலியாவில் களத்திலேயே சுருண்டு விழுந்து கிரிக்கெட் வீரர் பலி! ஷாக்
கான்பரா: ஆஸ்திரேலியாவில் அதீத வெப்பத்தால் மிக மோசமான சம்பவம் ஒன்று இப்போது நடந்துள்ளது. அங்கு கிரிக்கெட் போட்டி நடந்து வந்த நிலையில், அதீத வெப்பத்தைத் தாங்க முடியாமல் கிரிக்கெட் வீரர் ஒருவர் களத்திலேயே உயிரிழந்துள்ளார். வெப்பத்தால் மைதானத்தில் வீரர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் இப்போது வெப்பம் திடீரென அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அதீத வெப்பத்தால் சில மோசமான சம்பவங்களும் நடக்கிறது. அப்படி தான் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் வீரர் ஒருவர் மைதானத்திலேயே வெப்பத்தால் உயிரிழந்துள்ளார்.

வீரர் உயிரிழப்பு
உயிரிழந்த அந்த வீரர் ஜுனைத் ஜாபர் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் அடிலெய்டில் உள்ள கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். கிரிக்கெட் போட்டியில் விளையாடி வந்த இவர், அதீத வெப்பத்தால் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
கடந்த சனிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது கான்கார்டியா கல்லூரி ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் பிரின்ஸ் ஆல்ஃபிரட் ஓல்ட் கல்லூரி மற்றும் ஓல்ட் கான்கார்டியன்ஸ் அணி மோதியுள்ளன. ஓல்ட் கான்கார்டியன்ஸ் அணிக்காக ஜாபர் விளையாடியுள்ளார். அப்போது மாலை 4 மணியளவில் அதீத வெப்பத்தால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மைதானத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்த மருத்துவ குழுவினர் அவரை காப்பாற்ற முயன்ற போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
ரூல்ஸ் என்ன!
இந்தச் சம்பவம் நடந்த போது 40°C அதாவது சுமார் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருந்துள்ளது. அடிலெய்டு கிரிக்கெட் சங்கத்தின் விதிகளின்படி வெப்பம் 42°Cஐ தாண்டினால் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும். ஆனால், 40°C தான் இருந்ததால் போட்டியை நடத்தியுள்ளனர். அப்போது தான் இந்த எதிர்பார்க்காத துக்க சம்பவம் நடந்துள்ளது.
அணி நிர்வாகம்
வீரரின் மரணம் தொடர்பாக ஓல்ட் கான்கார்டியன்ஸ் கிரிக்கெட் கிளப் வெளியிட்டுள்ள, "கான்கார்டியா கல்லூரி ஓவல் மைதானத்தில் இன்று விளையாடும்போது மருத்துவ ரீதியாகப் பாதிக்கப்பட்ட ஓல்ட் கான்கார்டியன்ஸ் கிரிக்கெட் கிளப்பின் வீரர் மறைந்தார். அவரது மறைவால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம்.. களத்தில் இருந்த மருத்துவர்கள் கடுமையாக முயன்ற போதிலும், துரதிர்ஷ்டவசமாக அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அணியினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.
ஜாபர் முதலில் ஐடி துறையில் வேலை செய்து கொண்டு இருந்தார். வேலை நிமித்தமாகவே அவர் கடந்த 2013இல் பாகிஸ்தானிலிருந்து அடிலெய்டுக்கு குடிபெயர்ந்தார். கிரிக்கெட்டில் தீவிர ஆர்வம் கொண்ட அவர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார்.
நண்பர்கள் வேதனை
அவரை பற்றி அவரது நண்பர்கள் கூறுகையில், "இது ஒரு பெரிய இழப்பு.. அவர் நல்ல மனிதர்.. தாராள மனப்பான்மை கொண்டவர். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது" என்றார். சமீப காலமாகவே வெப்ப அலை என்பது ஆஸ்திரேலியாவில் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் வெப்ப அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆஸ்திரேலியா மட்டுமின்றி இந்தியாவிலும் கூட வெப்பம் இப்போது அதிகரித்து வருகிறது. வெப்பம் அதிகமாக இருக்கும்போது, குறிப்பாக மதியம் 1 முதல் 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் அதிகமாகத் தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்! நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications