15 வருடமாக மகனை தேடும் தந்தை..? 25,000 பேரின் நிலை என்ன? ஏகேடியை நம்பும் இலங்கைத் தமிழர்கள்
யாழ்ப்பாணம்: கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த போரின் போது காணாமல் போன மகனை 15ஆண்டுகளாக தேடிக் கொண்டுள்ளதால் ஏற்பட்டுள்ள மனவேதனையை இலங்கைத் தமிழர் ஒருவர் கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டுள்ளார்.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு இளம் ஜனாதிபதியை இலங்கை மக்கள் பெற்றுள்ளனர். கிட்டத்தட்டக் கடந்த 40 ஆண்டுகள் மேலாக இலங்கையில் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டு வந்த தமிழர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீது நிறைய நம்பிக்கைகளை வைத்துள்ளனர். அவர் இன மற்றும் மதரீதியான ஒடுக்குமுறைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பார் எனக் காத்திருக்கின்றனர். மேலும் விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி என இலங்கை பல நெருக்கடிகளில் மாட்டிக் கொண்டு தவித்து வருகிறது.

முந்தைய அரசாங்கம் வரிமேல் வரி போட்டு மக்களை நசுக்கியதால் மூச்சுவிட முடியாத அளவுக்கு மக்கள் தவித்து வந்தனர். அன்றாட செலவுக்கே பணம் இல்லாமல், வேலை வாய்ப்புகள் கிடைக்காமல் தவிக்கும் கொடூரமான சூழ்நிலை அங்கே நிலவியது. அதை எல்லாம் முறையாக மாற்றி நல்ல ஆட்சியை அநுர தருவார் என்று நம்பிதான் மக்கள் இவரை வெற்றிபெற வைத்துள்ளனர்.
அதைப் போல் அநுர பல வாக்குறுதிகளைத் தேர்தல் பரப்புரையின் போது அளித்திருந்தார். வருமானவரி உச்சவரம்பை 1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்துவோம் என்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம் என்றும் உணவுப் பொருட்களுக்கான வரியை முற்றிலுமாக நீக்குவோம் என்றும் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தார். அதை எல்லாம் அவர் நிறைவேற்றுவார் என இலங்கை மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள சாவகச்சேரி பகுதியில் வாழ்ந்து வரும் தமிழ் மீன மக்கள் பலர் 2007இல் நடைபெற்ற போரில் தங்களின் உறவுகளைத் தொலைத்துவிட்டுக் கடந்த 15 வருடங்களாக நடைப்பிணமாக நடமாடி வருகின்றனர். இந்தப் பகுதி யாழ்ப்பாணம் மாவட்டம் தென்மராட்சியில் அமைந்துள்ளது. இலங்கை போரின் போது உச்சக்கட்ட சண்டை நடந்த பகுதி இதுவாகும். 1995இல் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியது. அதற்கு முன் இது புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. கடந்த 2000 ஆம் ஆண்டு புலிகளின் 'ஓயாத அலைகள் மூன்று' போர் காலகட்டத்தில் சாவகச்சேரியை புலிகள் கைப்பற்றினர்.
இங்குள்ள மீசாலை பகுதியில் நிறைய மீனவ மக்கள் உள்ளனர். அவர்கள் கடந்த ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக மீன் பிடிப்பதற்காக எரிபொருள் விலை அதிகரித்துவிட்டது. மண்ணெண்ணெய் விலை லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் சென்றுவிட்டது. அதைக் குறைக்க வேண்டியும் போரின் போது காணாமல் போன தங்களின் பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தரக் கோரியும் புதிய ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்து முறையிட்டுள்ளனர். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மீனவர் ஒருவர் தன் மகனை இழந்து வாடி வரும் நிலையைப் பற்றி ஒரு இலங்கை யூடியூபருக்குப் பேட்டியளித்துள்ளார்.
அவர் பேசுகையில், "முக்கியமான இலங்கை மீனவர்கள் பிரச்சினை பற்றி ஜனாதிபதி அநுரகுமாரவை சந்திக்க வந்திருக்கிறோம். எரிபொருள் கிடைப்பது மிக முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. முன்பு எங்களுக்கு 100 ரூபாய்க்குள் மண்ணெண்ணெய் கிடைக்கும். அப்போதுதான் எங்களுக்குக் கட்டுப்படியாகும். எங்களுக்குத் தேவை நிவாரணம் இல்லை. விலைவாசியைக் குறைத்தால் எங்களால் சுயமாக வாழ முடியும்.
வடக்கு பிரதேசத்தில் உள்ள தமிழர்கள் பலர் காணாமல் போய் இருக்கிறார்கள். கடந்த காலங்களில் அவர்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை. என் மகனும் எங்கே போனான் என்பது இதுவரை தெரியவில்லை. அவனைத் தொலைத்துவிட்டு நாங்கள் தவித்து வருகிறோம். அவன் இருக்கிறானா? இல்லையா? ஒன்று புரியவில்லை. அந்த வலி என்னைப் போன்ற தாய் தகப்பனுக்குத் தான் தெரியும்.
என் மகன் 2007இல் காணாமல் போனான். அவனை 15 வருடங்களாகத் தேடிக் கொண்டிருக்கிறோம். ஒரு இடத்திலும் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் ஒருவேளை இறந்து போய் இருந்தால் ஒரு வருடம் நாங்கள் துக்கத்தில் தவித்து இருப்போம். அதன் பின் சகஜமாகி இருப்போம். ஆனால், அவன் இன்று வருவானா? நாளை வருவானா என்று தினம் தினம் செத்துச் செத்துப் பிழைக்க மாட்டோம். இதற்கு ஒரு விடை தெரிந்தாக வேண்டும்.

அவன் இறந்து இருந்தால், என்ன நடந்தது என்பது குறித்து நீதி விசாரணை தேவை. கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேரை இலங்கைப் போருக்குப் பின்னர் காணவில்லை. அவர்கள் எங்கே போனார்கள் என்பதற்குப் பதில் இல்லை. அதை புதிய ஜனாதிபதி தீர்த்து வைப்பார் என நம்புகிறோம். 25 ஆயிரம் பேரின் நிலை என்ன ஆனது என்பதை அரசு விளக்க வேண்டும். இளம் ஜனாதிபதியாக அநுரகுமார வந்துள்ளார். அவர் எங்கள் எரிபொருள் தட்டுப்பாட்டையும் காணாமல் போன 25 ஆயிரம் பேரின் நிலை என்ன என்பதையும் தீர்த்து வைப்பார் என்று நம்புகிறோம்.
என் மகன் இருந்ததற்கான ஆவண பதிவுகள் இருக்கின்றன. அவன் காணாமல் போன பட்டியலில் இருக்கின்றான். அப்படி இருந்தும் ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. இழப்பீடு பற்றிக்கூட யாரும் பேசவில்லை. அவனை ராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பிடித்தார்கள். யார் பிடித்தார்கள்? எப்படிப் பிடித்தார்கள் என்பது தெரியாது. நாங்கள் அவனைத் தேடிப்போகாத ஊர் கிடையாது. என் மகனுக்காக மட்டும் இதைப் பேசவில்லை. என் உறவினர்கள், சினேகிதர்கள் என அக்கம் பக்கத்தினர் பலர் தங்களின் பிள்ளைகளை இழந்து இருக்கிறார்கள். காணாமல் போன யாரும் வீடு திரும்பவில்லை.
முன்பு இருந்த ஜனாதிபதியிடம் இருந்து இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை. ஆனால், அநுரகுமார இதற்கு ஒரு தீர்வை தருவார் என நாங்கள் நம்புகிறோம். இதற்கு முன்பாக எங்கள் சாவகச்சேரி தொகுதி எம்பியிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். பல அரசு அதிகாரிகளிடம் கதைத்து இருக்கிறோம். ஒரு முன்னேற்றமும் இல்லை" என்கிறார்












Click it and Unblock the Notifications