ஈரானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்.! களத்தில் இறங்கிய மத்திய அரசு! ஒரே வாரத்தில் எல்லாம் போச்சு
தெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்து வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானில் உள்ள இந்திய மாணவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக சுமார் 100 மாணவர்கள் இன்று ஈரானின் அண்டை நாடான ஆர்மீனியாவுக்கு செல்கிறார்கள்.
இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் நாட்டில் உள்ள இந்தியக் குடிமக்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, இந்தியர்கள் அடங்கிய குழு ஒன்று இன்று இரவுக்குள் ஆர்மீனியாவுக்குள் செல்ல உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தரை மார்க்கமாக அந்த குழு ஆர்மீனியா செல்கிறது.

இந்தியா நடவடிக்கை
இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருவதால் ஈரான் தனது வான்வெளியை மூடியுள்ளது. அதனால் விமானம் மூலம் இந்தியர்களை மீட்டு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தரை மார்க்கமாக அண்டை நாடுகளுக்குச் செல்ல அனுமதி அளித்துள்ளது.
ஒரே வாரத்தில் எல்லாம் போச்சு
இஸ்ரேல் - ஈரான் போர் நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்களைப் பத்திரமாக அழைத்து வரும் நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக 100 இந்தியர்கள் இன்று இரவுக்குள் ஆர்மீனியாவுக்குள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ஒரு வாரத்தில் இந்த மோதலால் தங்கள் படிப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளதாக அங்குள்ள இந்தியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அண்டை நாடுகள் வழியாக
இஸ்ரேல் தொடர்ந்து முக்கிய நகரங்கள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருவதால், ஈரானில் சிக்கித் தவிக்கும் சுமார் 10,000 மாணவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வரும் நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இது குறித்து ஈரானிடம் இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது. வான்வெளி மூடப்பட்டு இருப்பதால்.. மாணவர்கள் தரை மார்க்கமாக அசர்பைஜான், துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு செல்லலாம் என ஈரான் தெரிவித்தது. அதன்படியே இப்போது இந்திய மாணவர்கள் ஆர்மீனியா செல்கிறார்கள்.
ஈரானில் உள்ள இந்திய தூதரகம்
ஈரானில் உள்ள இந்திய தூதரகம் கடந்த ஜூன் 15-ம் தேதி ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில் ஈரானில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், இந்திய தூதரகத்தின் சமூக வலைத்தள பக்கங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதிகரிக்கும் பதற்றம்!
போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா இஸ்ரேலைக் கட்டுப்படுத்த தவறினால் ஈரான் இன்னும் கடுமையான பதிலடி கொடுக்கும் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷ்கியான் எச்சரித்துள்ளார். ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உடன் தொலைப்பேசியில் பேசிய பெஷ்கியான், ஈரான் தக்க பதிலடிகளைக் கொடுத்து வருவதாகத் தெரிவித்தார். மேலும் இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் தொடர்ந்தால், ஈரானின் பதிலடி இன்னும் கடுமையானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
சமீபத்தில் ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சில பகீர் கருத்துகளைக் கூறியிருந்தார். அதாவது ஈரான் தலைவர் கமேனியை கொன்றால் மட்டுமே மோதல் முடிவுக்கு வரும் என்பது போல அவர் கூறியிருந்தார். இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரிக்கவே போகிறது என்பதையே அவரது பேச்சு காட்டுகிறது. இதன் காரணமாகவே இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications