For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிட்னி முருகன் கோவில் மஹோற்சவம்.. கொடியேற்றத்துடன் தொடக்கம்

Google Oneindia Tamil News

சிட்னி: சிட்னியில் உள்ள முருகன் கோவி்லில் வருடாந்திர மஹோற்சவ விழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது.

சிட்னி மாநகரில் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்துள்ள சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்வசம் நேற்று சனிக்கிழமை (08.03.2014) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இந்த விழாவில் பெரும் திரளான தமிழர்கள், முருக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பூஜைகள்

பூஜைகள்

முதலாவது கால பூஜை 7 மணிக்கும் இரண்டாவது காலப் பூஜை 8 மணிக்கும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து 8:30 மணிக்கு முருகனுக்கான அபிசேகம், பூர்வ சந்தானம், வஜ்ர சந்தானமாகிய கொடிச் சீலைக்கு உரிய பூஜைகள் இடம்பெற்றன. சிறப்பு பூஜை 9 மணிக்கு இடம்பெற்றதைத் தொடர்ந்து 10:30 மணிக்கு வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது.

பிற்பகலில் கொடியேற்றம்

பிற்பகலில் கொடியேற்றம்

சிட்னி முருகன் ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியராகிய யாழ்ப்பாணம் சிவஸ்ரீ குகசாமி குருக்கள் தலைமையில் பிற்பகல் 12 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது.

ஈழத்திலிருந்து மங்கள இசை

ஈழத்திலிருந்து மங்கள இசை

மங்கள இசையினை ஈழத்தின் புகழ் பூத்த கலைஞர்களான சின்ன காரைக்குறிச்சி என்று அழைக்கப்படும் சு.பாலமுருகன், பிரபல நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தியின் புதல்வன் குமரேசன், ஈழத்தின் தலைசிறந்த தவில் மாமேதை தட்சணாமூர்த்தியின் புதல்வன் உதயசங்கர், பாலமுருகனின் சகோதரன் சு.செந்தில்நாதன் ஆகியோருடன் உள்ளுர் கலைஞர்களான சத்தியமூர்த்தி, வைத்தீஸ்வரன் ஆகியோர் வழங்க, முருகப்பெருமானின் உள்வீதி வலம் 12:45 மணிக்கு தொடங்கியது.

கோவில் வீதி வலம்

கோவில் வீதி வலம்

இதனைத் தொடர்ந்து வெளி வீதி வலம் 1:15 மணிக்கு தொடங்கியது. மீண்டும் முருகப் பெருமான் வசந்த மண்டபத்தினை சென்றடைந்ததும் அடியார்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இரவுத் திருவிழா

இரவுத் திருவிழா

சாயரட்சை பூசை 4.15 மணிக்கு இடம்பெற்றதனைத் தொடர்ந்து 4:30 மணிக்கு யாக பூசை இடம்பெற்றது. இரண்டாவது மாலைப் பூசை 5:30 மணிக்கு தொடங்கி, அதைத் தொடர்ந்து கொடித்தம்பப் பூசை, 108 போற்றி வழிபாடு ஆகியன இடம்பெற்றன.

மங்கள இசையுடன் வீதி வலம்

மங்கள இசையுடன் வீதி வலம்

வசந்த மண்டபப் பூசை 6:30 மணிக்கு இடம்பெற்றதனைத் தொடர்ந்து ஈழத்தில் இருந்து வருகை தந்திருந்த கலைஞர்களுடன் உள்ளுர் கலைஞர்களும் இணைந்து மங்கள இசையினை வழங்க முருகப் பெருமான் உள்வீதி வலம் 7:15 மணிக்கு தொடங்கியது.

அர்த்த சாமப் பூஜை

அர்த்த சாமப் பூஜை

இரவு 7:45 மணிக்கு தொடர்ந்து வெளிவீதி வலம் தொடங்கி, முருகப்பெருமான் 8:30 மணியளவில் இருப்பிடத்துக்கு சென்றடைந்ததும் சிறப்பு மங்கள இசை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அர்த்த சாமப்பூசை இடம்பெற்றது.

திரண்டு வந்த பக்தர்கள்

திரண்டு வந்த பக்தர்கள்

வார இறுதி நாளில் திருவிழா இடம்பெற்ற காரணத்தினால் சிட்னி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து பெருமளவிலான பக்தர்கள் நேற்றைய திருவிழாவில் கலந்து சிறப்பித்தனர்.

மாம்பழத் திருவிழா

மாம்பழத் திருவிழா

எதிர்வரும் வியாழக்கிழமை (13.03.14) மாம்பழத் திருவிழாவும், வெள்ளிக்கிழமை (14.03.14) வேட்டைத் திருவிழாவும், சனிக்கிழமை (15.03.14) சப்பறத் திருவிழாவும், ஞாயிற்றுக்கிழமை (16.03.14) தேர்த் திருவிழாவும், திங்கட்கிழமை (17.03.14) தீர்த்தத் திருவிழாவும் சிறப்பு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முருகன் அருளாசி பெற வாருங்கள்

முருகன் அருளாசி பெற வாருங்கள்

இறை அடியார்கள் அனைவரும் திரண்டு வந்து சிட்னி முருகன் மஹோற்சவத்தைக் கண்டுகளித்து முருகனின் அருளாசிகளைப் பெற்று உய்யுமாறு சிட்னி முருகன் ஆலய சைவமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

English summary
Hundreds of Tamils and devotees witneseed the flag hoisting of Sydney Murugan temple Mahorsavam yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X