ஹிட்லர் படைகளை கதற விட்ட இந்திய பெண் உளவாளி.. 80 ஆண்டுகள் கழித்து கவுரவித்த பிரான்ஸ்!
பாரீஸ்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் உளவாளி ஒருவரை பிரான்ஸ் அரசு கவுரவித்துள்ளது. கொடூரமான நாஜி படைகளுக்கு எதிராக உளவு பார்த்துச் சிறப்பாகச் செயல்பட்ட அவருக்கு பிரான்ஸ் அரசு தபால் தலையை வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் அரசு மூலம் கவுரவிக்கப்பட்ட ஒரே இந்திய வம்சாவளி பெண் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நூற்றாண்டு இரு பெரும் உலகப் போர்களைச் சந்தித்திருந்தது. அதிலும் குறிப்பாக 2ம் உலகப் போர் மிக பெரிய பேரிழப்புகளை ஏற்படுத்தியது. அதுவரை உலகின் வல்லரசாக இருந்த நாடுகள் எல்லாம் மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்தது. அப்போது உலகையே ஹிட்லரின் நாஜி படைகள் ஆட்டிப்படைக்க விரும்பியது.

இந்திய வம்சாவளி பெண் உளவாளி
அந்த இரண்டாம் உலகப் போரில் மிக முக்கிய பங்காற்றிய நூர் இனாயத் கான் என்ற பெண் உளவாளியைத் தான் பிரான்ஸ் அரசு கவுரவித்துள்ளது. 2ம் உலகப் போரின்போது அவரது சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி பிரான்ஸ் அரசு நூர் இனாயத்திற்கு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. 18ஆம் நூற்றாண்டு மைசூர் மன்னர் திப்பு சுல்தானின் வம்சாவளியைச் சேர்ந்தவர் தான் நூர் இனாயத். பிரான்ஸ் அரசு கவுரவித்த ஒரே இந்தியப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
போரில் பிரிட்டன் உளவாளியாகச் செயல்பட்டுப் பல வீரதீரச் செயல்களைச் செய்ததால் அவருக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. 2ம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், போரில் சேவை செய்தவர்களைக் கவுரவிக்கும் வகையில் பிரான்ஸ் அரசு இந்த தபால் தலையை வெளியிட்டுள்ளது. 2ம் உலகப் போரில் சிறப்பாக பணியாற்றிய பலருக்கு தபால் தலை வெளியிடப்பட்ட நிலையில், அந்த கவுரவம் கிடைத்த ஒரே பெண் நூர் இனாயத் ஆகும்.
கவுரவம்
இது தொடர்பாக நூரின் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக எழுதிய லண்டனைச் சேர்ந்த எழுத்தாளர் ஷ்ரபானி பாசு கூறுகையில், "நூர் இனாயத் கானுக்கு பிரான்ஸ் அஞ்சல் தலை வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.. அதிலும் போர் முடிந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்த இந்த முக்கியமான தருணத்தில் இது நிகழ்ந்துள்ளது.. பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் நூர் தன் உயிரைத் தியாகம் செய்தார். அவர் பாரீஸில் வளர்ந்து, இங்கிலாந்திற்காக 2ம் உலக போரில் பணிபுரிந்தார்" என்றார்.
யார் இவர்
நூர்-உன்-நிசா இனாயத் கான், 1914இல் மாஸ்கோவில் ஓர் இந்திய இஸ்லாமிய சூஃபி துறவி தந்தைக்கும், அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தார். சில காலம் அவரது குடும்பத்தினர் லண்டனில் வசித்த நிலையில், பிறகு பாரீஸில் குடியேறினர். இரண்டாம் உலகப் போரின்போது பிரான்ஸ் வீழ்ச்சி அடைந்த நிலையில், அவரது குடும்பம் இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்றது.
அப்போது தான் பிரிட்டன் விமானப் படையில் சேர்ந்தார். 1943 பிப்ரவரி 8ம் தேதி, அவர் சிறப்பு நடவடிக்கை குழுவில் சேர்க்கப்பட்டார். போரின் போது எதிரி நாட்டு பகுதிகளுக்குச் சென்று உளவு பார்க்கப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சீக்ரெட் அமைப்பு தான் இது! இந்த அமைப்பில் தீவிர பயிற்சி பெற்ற அவர், பிரிட்டனுக்காக உளவு பார்க்க ஆரம்பித்தார்.
என்ன செய்தார்
1943 ஜூன் மாதம், ஹிட்லர் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சில் ஊடுருவினார். இந்த செயலை செய்த முதல் பெண் உளவாளி என்ற பெயரையும் பெற்றார். இருப்பினும், சில காலத்திலேயே அவரை நாஜி படைகள் கைது செய்தனர். டச்சாவ் தடுப்பு முகாமிற்கு அடைக்கப்பட்ட அவரை நாஜி படைகள் சித்திரவதை செய்தது. தொடர்ந்து 1944 செப்டம்பர் 13ம் தேதி அவர் தூக்கிலிடப்பட்டார். அப்போது அவருக்கு வயது வெறும் 30 தான் ஆகியிருந்தது. அந்த வயதிலேயே வீர தீர உளவு செயலை செய்து தனது உயிரை இழந்தார்.
இருப்பினும் அவரது பங்களிப்பும் அவர் கொடுத்த தகவல்களும் பிரிட்டன் ராணுவத்திற்கு முக்கியமானதாக இருந்தது. இதன் காரணமாகவே 80 ஆண்டுகள் கழித்தும் அவர் நினைவு கூரப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications