'ட்ராப்-அவுட்' டீக்கடை.. ஆஸ்திரேலியாவில் படிக்க சென்ற இந்திய மாணவன் கோடீஸ்வரனாக மாறிய சம்பவம்!
கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் படிக்க சென்ற இந்திய மாணவர் ஒருவர், படிப்பை பாதியில் கைவிட்டு, தொழிலதிபராக மாறியிருக்கிறார். இன்று அவர் பல கோடிகளுக்கு அதிபதியாக உயர்ந்திருக்கிறார்.
படிப்பை கைவிட்டால் கோடீஸ்வரனாகிவிடலாம் என்பது உண்மையில்லை. ஆனால், வாழ்வதற்கு இங்கு பல வழிகள் இருக்கிறது என்பதை இந்திய மாணவரின் வாழ்க்கை தெளிவுபடுத்தியுள்ளது.

சஞ்சித் கொண்டா எனும் பெங்களூரை சேர்ந்த மாணவன், உயர்கல்வி கனவுக்காக கடந்த 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியா செல்கிறார். அங்கு La Trobe பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிக துறையில் சேர்கிறார். தொடக்கத்தில் எல்லாம் சரியாகத்தான் சென்றுக்கொண்டிருந்தது. 4 செமஸ்டர்களை கிளியர் செய்த பின்னர் தனக்கு இந்த படிப்பு அவ்வளவாக செட் ஆகவில்லை என்பதை உணர்ந்திருக்கிறார். இதனையடுத்து 5வது செமஸ்டரில் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி, டீ கடையை தொடங்குகிறார். கடைக்கு பெயர் ட்ராப்-அவுட் (Dropout Chaiwala).
வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் இலக்கு ஒன்றுதான். அங்கேயே வேலை கிடைத்து செட்டில் ஆகவேண்டும் என்பதுதான் அது. ஆனால் 100ல் 90 மாணவர்களுக்கு இது சாத்தியமாவதில்லை. 90ல் தானும் ஒருவனாக இருக்க சஞ்சித் விரும்பவில்லை. எனவே தன்னம்பிக்கையுடன் டீக்கடையை நடத்துகிறார். நண்பர்கள் உதவிக்கு வருகின்றனர். அசார் அகமது சயீத், பிரிதம் அகுலா, அருண் பி சிங் என 3 பேரும் சேர்ந்து சுமார் ரூ.18 லட்சம் வரை முதலீடு செய்கின்றனர்.
கடை விரைவில் சோஷியல் மீடியாக்களில் பேமஸாகிறது. மசாலா டீ, இஞ்சி-தேன் டீ, லெமன் டீ என குறிப்பிட்ட சில வகை டீ மட்டுமே தொடக்கத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் பின்னாட்களில் பல்வேறு டீ வகைகள் சேர்க்கப்படுகின்றன. சமோசா, சாண்ட்விச் கூட சேர்த்து விற்கப்படுகிறது. கடையில் ஒரு டீ மற்றும் கொஞ்சம் சினாக்ஸ் ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது விலை அதிகமாக தெரிந்தாலும், ஆஸ்திரேலியா ரேட்டுக்கு கம்மிதான்.
பிசினஸ் சூடுபிடிக்க தொடங்குகிறது. அடுத்தடுத்து கிளைகளை சஞ்சித் திறக்க தொடங்குகிறார். புதிய யோசனையாக மொபைல் டீ ட்ரக்-ஐ அறிமுகப்படுத்துகிறார். இதன் மூலம் பல்கலைக்கழக நிகழ்ச்சிகள், பண்டிகைகள், திருமணங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு டீ விற்கப்படுகிறது. இன்று மெல்போர்னில் உள்ள எலிசபெத் தெருவில் இவரது டீக்கடை முக்கிய பாயிண்டாக மாறியிருக்கிறது. 2022-ஆம் ஆண்டு நிலவரப்படி இவரது டீக்கடை ஆண்டுக்கு ₹5.2 கோடி வருமானம் ஈட்டியிருக்கிறது. நிகர லாபம் 20% வரை இருக்கலாம் என சொல்லப்பட்டிருக்கிறது.
40 ஊழியர்களுடன் பேமஸான டீக்கடையாக ட்ராப்-அவுட் இருக்கிறது. உண்மையில் இந்த வெற்றிக்கு காரணம் அவர் படிப்பை பாதியில் கைவிட்டது கிடையாது. வெற்றிகரமான தொழில் முனைவோராக மாற வேண்டும் என்கிற எண்ணம்தான். இதற்காக சஞ்சித் சில ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் டீக்கடை வைத்தால் எப்படி ஓடும், எங்கு ஓடும், டீ வகைகளை அதிகரிக்க என்ன செய்யலாம்? என பல்வேறு ஆய்வுகளை செய்து படித்து அதன்பின் வியாபார யுக்தியை வகுத்து செயல்படுத்தி இன்று வெற்றிகரமான பிசினஸ்மேனாக இருக்கிறார்.
வாழ்க்கை பல நேரங்களில் நம்மை கைவிடலாம். ஆனால், வாழ்வதற்கு எங்காவது சிறு வெளிச்சம் தெரிந்தாலும் அதை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள். சஞ்சித் இதைத்தான் செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications