பலாத்கார சம்பவங்கள்: இந்திய மாணவருக்கு அனுமதி மறுத்த ஜெர்மன் பல்கலைக்கழகம்
பெர்லின்: இந்தியாவில் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதை காரணம் காட்டி இந்திய மாணவரின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது ஜெர்மன் பல்கலைக்கழகம்.
இந்தியாவில் தினசரி ஏதாவது ஒரு மாநிலத்தில் முக்கிய நகரத்தில் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இது ஊடகங்களில் மிகப்பெரிய செய்திகளாக வெளியிடப்படுவதால் உலகம் முழுவதும் தெரியவருகிறது.

இந்த பலாத்கார சம்பவங்கள், ஜெர்மனி நாட்டுக்கு கல்வி கற்க சென்ற ஒரு மாணவரை பாதித்து இருக்கிறது. அங்குள்ள பழமையான லீப்ஜிக் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியை பெக்-சிக்கிங்கரிடம் உயிரிவேதியியல் துறையில் மேல் படிப்பில் சேர இந்திய மாணவர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனுமதி மறுப்பு
இந்தியாவில் அதிக அளவில் நடைபெறும் பலாத்கார சம்பவங்கள் காரணமாக, பிஹெச்.டி. படிப்புக்கான அவரது விண்ணப்பத்தை ஏற்க அந்த பேராசிரியை மறுத்து இருக்கிறார்.
இ-மெயில் அம்பலம்
இது தொடர்பாக அவருக்கும் பாதிக்கப்பட்ட அந்த மாணவருக்கும் இடையே நடைபெற்ற மின்னஞ்சல் கடித பறிமாற்றங்களை, அவரது சக மாணவர் ஒருவர் அம்பலப்படுத்தியதை தொடர்ந்து, இந்த விவகாரம் வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.
தூதரகம் கண்டனம்
இதைத்தொடர்ந்து, பேராசிரியை பெக்-சிக்கிங்கரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து டெல்லியில் உள்ள ஜெர்மனி தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் அவருக்கு கடிதம் எழுதினார்.
பேராசிரியை மன்னிப்பு
இதனால், தான் தவறு செய்து விட்டதாகவும், தனது செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் பேராசிரியை பெக்-சிக்கிங்கர் கூறி இருப்பதாக ஜெர்மனி தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications