ஹமாஸ் படையின் முக்கிய தளபதி பலி.. வீட்டை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குடும்பமே உயிரிழப்பு
டெல் அவிவ்: காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய விமானப்படை தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் கமாண்டர்களில் ஒருவரான தலால் அல் ஹிண்டி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதியன்று, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். சுமார் 5 ஆயிரம் ஏவுகணைகள் தொடர்ந்து பல முனைகளில் இருந்தும் ஏவப்பட்ட நிலையில் இஸ்ரேலை சேர்ந்த 1300 பேர் இறந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஹமாஸின் இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் ஹமாஸை ஒழிக்க பல ஏவுகணைகளை வீசியது. இதில் இதுவரை மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் விமானப்படைத் தலைமையகத்தை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இரவு நேர வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் விமானப்படை தலைமையகம் அழித்தொழிக்கப்பட்டது. இதில் ஹமாஸ் அமைப்பின் விமானப்படைத் தளபதி முராத் அபு முராத் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர்.
காசாவில் உள்ள அல்-ஆஹ்லி மருத்துவமனை மீது ஹமாஸ் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. இதில் 500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹமாஸின் இராணுவ மற்றும் ஆட்சித் திறன்களை அழிக்கும் வரை போர் நிறுத்தப்பட மாட்டாது எனவும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். இந்நிலையில், காசா மீது இஸ்ரேல் விடிய விடிய வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் சுமார் 50 கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
காஸா மீது தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தவும் இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதனிடையே, வடக்கு காசா மற்றும் காசா நகரில் உள்ள பொதுமக்கள் உடனடியாக காசாவின் தெற்கு பகுதிக்குச் செல்லும்படி இஸ்ரேல் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. காசா நகரில் இருப்பவர்கள் அல்லது காசா நகருக்கு திரும்பி வருபவர்கள் பயங்கரவாதிகளாக கருத்தப்படுவர் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய படைத்தளபதி தலால் அல் - ஹிண்டி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவின் ராணுவப் பிரிவான அல்-குவாசம் பிரிகேட்ஸின் முக்கிய படைத்தளபதியாகச் செயல்பட்டு வந்தவர் தலால் அல் ஹிண்டி.
மத்திய காசாவில் உள்ள தலால் அல் ஹிண்டியின் வீட்டை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அல் ஹிண்டி, அவரது மனைவி உள்பட 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கியமான ராணுவ தளபதிகள் 6 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications