"பிணைய கைதிகளை விடுவிக்க ரெடி.." ஹமாஸ் போட்ட ஒரே நிபந்தனை.. கடும் டென்ஷனில் இஸ்ரேல்! அடுத்து என்ன
டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், பிணையக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்ந்தே வருகிறது. முதலில் இந்த போரில் ஹமாஸ் கை ஓங்கி இருப்பது போலத் தெரிந்தாலும் கூட, சீக்கிரமே இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது.

காசா மீது தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. காசாவின் டாப் தளபதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடரும் மோதல்: இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனையைச் சுற்றி இப்போது தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. மோதலுக்கு முன்னரே பல ஆயிரம் பேர் மருத்துவமனையை விட்டு வெளியேறினர். இருப்பினும், இன்னுமே கூட பல நூறு நோயாளிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மருத்துவமனையில் உள்ளே சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அமெரிக்க அசிரக் ஜோ பைடனும் மருத்துவமனைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை விமர்சித்துள்ளார். காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று பைடன் வலியுறுத்தினார். மேலும் காசாவில் மருத்துவமனைகள் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்களை நடத்தக் கூடாது என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
என்ன காரணம்: இருப்பினும், தாங்கள் ஏன் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்பதற்கு இஸ்ரேல் விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது காசா மருத்துவமனைகள் கீழ் தான் ஹமாஸ் சுரங்கங்களின் முக்கிய கட்டுப்பாட்டு மையங்கள் இருக்கிறது. அதைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் தரப்பில் கூறியுள்ளது. அங்குள்ள மருத்துவமனைக்குக் கீழ் எப்படி ஹமாஸ் கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது என்பதை விளக்கும் வகையில் வீடியோ ஒன்றையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
போர் நிறுத்தம்: இப்படி இரு தரப்பிற்கும் இடையே இப்படிப் போர் தொடரும் நிலையில், ஹமாஸ் தரப்பில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இஸ்ரேல் 5 நாட்கள் போர் நிறுத்தம் செய்யச் சம்மதித்தால் அதற்கு ஈடாக 70 பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்க ரெடியாக உள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
இந்த போர்நிறுத்தம் முழுமையான போர் நிறுத்தமாக இருக்க வேண்டும்.. காசாவில் எந்தவொரு பகுதியிலும் தாக்குதல் நடத்தப்படக் கூடாது.. காசா முழுக்க உதவி பொருட்கள் சப்ளை செய்வதை அனுமதிக்க வேண்டும். இதற்குச் சம்மதித்தால் பிணையக் கைதிகளை விடுவிக்க ரெடியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரே நிபந்தனை: இது குறித்து ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அபு உபைடா கூறுகையில், "போர் நிறுத்தம் குறித்தும் பிணையக் கைதிகளை விடுவிப்பது குறித்தும் கத்தாரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது ஐந்து நாள் போர் நிறுத்தம் வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். அதற்குப் பதிலாக 50 பேரை விடுவிக்கிறோம் என்றோம். இருப்பினும், பிணையக் கைதிகளுக்கு சில சிக்கல்கள் இருப்பதால் 70 பிணையக் கைதிகளை விடுவிக்கச் சம்மதித்துள்ளோம். ஆனால், இஸ்ரேல் 100 பிணையக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் கேட்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகள் இஸ்ரேலுக்கு கடும் டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் இஸ்ரேல் என்ன முடிவை எடுக்கும் என்பது முக்கியமானது. ஹமாஸுக்கு போர் நிறுத்தம் தேவை.. மறுபுறம் இஸ்ரேலுக்குப் பிணையக் கைதிகள் விடுவிக்க வேண்டும். எனவே, பல்வேறு விவகாரங்களை பரீசிலனை செய்தே இஸ்ரேல் முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications